×

வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாமல் விதியை மீறி வாக்களித்துள்ளார் நடிகர் ஸ்ரீகாந்த் : சத்யபிரதா சாஹூ தகவல்

சென்னை : நடிகர் ஸ்ரீகாந்த் பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், விதியை மீறி ஸ்ரீகாந்த் வாக்களித்துள்ளார் என்றும் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ கூறியுள்ளார். தமிழகத்தில் கடந்த 18ம் தேதி மக்களவை தேர்தல் நடைபெற்றது. இதில் வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்களை வாக்களிக்க அனுமதிக்கப்படவில்லை. ஆனால் நடிகர் சிவகார்த்திகேயன் பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லாத போதும், அவரை வாக்களிக்க அனுமதித்ததாக குற்றாச்சாட்டு எழுந்தது. இதையடுத்து நடத்திய விசாரணையில் இந்த குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டது. எனினும் சிவகார்த்திகேயன் யாருக்கு வாக்களித்தார் என்பது தெரியாததால், அவரது வாக்கும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும், ஆனால் வாக்கு எண்ணிக்கையின் போது தேர்தல் ஆணையத்தில் உத்தரவு கருத்தில் கொள்ளப்படும் என சத்யபிரதா சாஹூ தெரிவித்திருந்தார்.

இதேபோல் நடிகர் ஸ்ரீகாந்த்தும் வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாத நிலையிலும் வாக்களித்தாக கூறப்பட்டது. முன்னதாக அவர் வாக்களிக்கவில்லை, விரலில் மை மட்டுமே வைத்துச் சென்றார் என கூறப்பட்டது. இந்நிலையில் தற்போது விதியை மீறி ஸ்ரீகாந்த் வாக்களித்துள்ளார் என சத்யபிரதா சாஹூ கூறியுள்ளார். சிவகார்த்திகேயன், ஸ்ரீகாந்த் வாக்களித்தது தொடர்பாக தேர்தல் நடத்தும் அதிகாரிகள் விசாரணை மேற்கொள்வார்கள் என்றும், தேர்தல் நடத்தும் அதிகாரிகள் அறிக்கை அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

சிவகார்த்திகேயன், ஸ்ரீகாந்த் வாக்களித்தது குறித்து தேர்தல் ஆணையத்துக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், வாக்காளர் பட்டியலில் இருந்து சிவகார்த்திகேயன், ஸ்ரீகாந்த் பெயர் நீக்கப்பட்டது குறித்தும் விசாரணை நடத்தப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் 45 வாக்கு எண்ணும் மையங்களிலும் நான்கு அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்படும், வாக்கு எண்ணும் அனைத்து மையங்களிலும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார். மேலும் தமிழகம் முழுவதும் 1,33,632 தபால் வாக்குகள் பெறப்பட்டுள்ளதாகவும், மதுரை வாக்கு எண்ணும் அறைக்குள் வட்டாட்சியர் சென்றது தொடர்பாக தேர்தல் ஆணையத்துக்கு அறிக்கை அனுப்பப்படும் என்றும் சத்யபிரதா சாஹூ கூறியுள்ளார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Srikanth: Sathyabrada Sahu , Voter list, actor Srikanth, Satyabrata Sahoo, Lok Sabha polls
× RELATED வங்கக்கடலில் உருவான குறைந்த...