×

மீன்பிடி தடைகாலம் எதிரொலி : கடல் மீன் விலை கிடுகிடு உயர்வு

சேலம்: தமிழகத்தில் மீன்பிடி தடைகாலம் அமலில் உள்ளதால் கடல் மீன்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதில் அதிகபட்சமாக கிலோ 600க்கு விற்ற வஞ்சிரம் தற்போது 900க்கு விற்கப்படுகிறது. தமிழகம் முழுவதும் உள்ள கடல் பகுதிகளில் மீன்களின் இனப்பெருக்கத்துக்காக ஆண்டுதோறும் மீன் பிடிதடை காலம் விதிக்கப்படுகிறது. அந்த வகையில் நடப்பாண்டில் கடந்த 16ம்தேதி தொடங்கிய தடைக்காலம், ஜூன் 15ம்தேதிவரை நீடிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த காலகட்டத்தில் மீன்களின் இனப்பெருக்கம் அதிகரிக்கும் என்பதால், மீனவர்கள் மீன்பிடிக்க அரசு தடைவிதித்துள்ளது. இதன் எதிரொலியாக தமிழகம் முழுவதும் உள்ள மீன் மார்க்கெட்டுகளுக்கு வரும் கடல் மீன்களின் வரத்து வெகுவாக குறைந்துவிட்டது. இதனால் விலையும் வெகுவாக உயர்ந்துள்ளது என்கின்றனர் வியாபாரிகள்.  

இது குறித்து சேலம் வ.உ.சி. மீன் மார்க்கெட் சங்க தலைவர் சர்புதீன் கூறியதாவது: சேலம் மார்க்கெட்டுக்கு தூத்துக்குடி, நாகை, கடலூர், ராமேஸ்வரம் மற்றும் கேரளா பகுதிகளில் இருந்து கடல் மீன்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. அதன்படி சராசரியாக நாள் தோறும் 2டன் வந்து கொண்டிருந்தது. தற்போது மீன்பிடி தடைக்காலம் என்பதால் வரத்து பாதியாக குறைந்துள்ளது. தற்போது சராசரியாக ஒரு டன்னுக்கும் குறைவாகவே மீன் வந்து கொண்டிருக்கிறது. அதிலும் கேரளாவில் இருந்து மத்திமீன்கள் மட்டுமே வருகிறது. இதர பகுதிகளில் இருந்து சொற்ப அளவில் வரும் இதர மீன்களின் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது.     

தற்போதைய நிலவரப்படி வஞ்சிரம் கிலோ  (பெரியது) 900, சிறியது கிலோ 450 முதல் 500, ஊழி கிலோ 300க்கும் விற்கிறது. தடைகாலத்திற்கு முன்பு கிலோ 180 முதல் 200க்கு விற்றது. தடைகாலத்திற்கு முன்பு வஞ்சரம் கிலோ (பெரியது) 600க்கும் சிறியது 350க்கும் விற்றது. அதேபோல், மத்தி தடைகாலத்துக்கு முன்பு கிலோ 70க்கு விற்றது. தற்போது 150க்கு விற்பனையாகிறது. தடைகாலம் முடிந்த பிறகே கடல் மீன்கள் வரத்து இருக்கும். அதன் பின்னரே கடல் மீன்களின் விலையும் குறையும். தற்போது மார்க்கெட்டுக்கு அணை மீன்களே அதிகம் வருகிறது. இதுவும் தடை காலத்துக்கு முன்பு கிலோ 110க்கு விற்றது. தற்போது 20 அதிகரித்து கிலோ 130க்கு விற்பனையாகி வருகிறது. இவ்வாறு சர்புதீன் கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Salem, barrier, sea fish
× RELATED தமிழ்நாட்டிற்கு வழங்கப்படும்...