×

கத்தரி வெயில் துவங்கும் முன் வெள்ளரி விற்பனை படுஜோர் : வியாபாரிகள் மகிழ்ச்சி

புதுக்கோட்டை: புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்திற்கு சென்னை, திருப்பூர், கோயம்புத்தூர், வேலூர், விழுப்புரம், மதுரை, தஞ்சாவூர், திருச்சி, சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் பேருந்துகள் வந்து செல்கின்றன. இதனால் பேருந்து நிலையத்தில் எப்பொழுதும் பயணிகள் வருவதும் போவதுமாக இருந்து வருகிறது. குறிப்பாக தஞ்சாவூர், திருச்சி, மதுரை, காரைக்குடி, சிவகங்கை, ராமநாதபுரம், மணப்பாறை ஆகிய ஊர்களுக்கு அதிக அளவில் பேருந்துகள் வந்து செல்கிறது. இதேபோல் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பல கிராமங்களுக்கு நகர பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இதனால் அனைத்து பேருந்துகள் நிற்கும் பகுதியில் பயணிகள் கூட்டம் இருந்துகொண்டே இருக்கும். இதனால் பேருந்து நிலையத்தில் முந்திரி பருப்பு, பூ வியாபாரம் என பல வியாபாரத்தில் சிறு வியாபாரிகள் ஈடுபட்டு வருவார்கள்.

இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தில் வெள்ளரிக்காய் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது. புதுக்கோட்டை திருமயம், ஆலங்குடி, அறந்தாங்கி, பொன்னமராவதி மற்றும் சிவகங்கை மாவட்டத்தில் விளையக்கூடி வெள்ளிரிகளை வியாபாரிகள் மொத்தமாக வாங்கி பேருந்து நிலையத்தில் மூட்டைகளை அடுக்கி வைத்து விடுகின்றனர். பின்னர் சிறிய கூடைகளில் அதன் கொள்ளவுக்கு ஏற்ப அடுக்கி வைத்துகொண்டு வெள்ளரி என்று வியாபாரத்தில் இறங்கி விடுகின்றனர். திருச்சியில் இருந்து காரைக்குடி செல்லும் பேருந்து புதுக்கோட்டை பேருந்து நிலையத்திற்கு வந்தவுடன் பேருந்தின் இருபுரத்திலும் வெள்ளரி வியாபாரிகள் சென்று ஜன்னல் வழியாக வெள்ளிரிக்காயின் விலையை கூவி கூவி விற்பனை செய்கின்றனர்.

அதிலும் வெள்ளரிக்காய்களை பூப்போல துண்டுகளாக்கி, பார்த்தவுடன் வாங்கும் அளவிற்கு நறுக்கி மிளகாய் பொடியோடு சேர்த்து விற்கின்றனர். இதேபோல் தஞ்சாவூரில் இருந்து மதுரை செல்லும் பேருந்து புதுக்கோட்டை பேருந்து நிலையத்திற்குள் நுழைந்தவுடன் பேருந்து அருகே சென்று விற்பனையை தொடங்கி விடுகின்றனர். அதிகமாக வாங்கும் பயணிகளுக்கு விலையும் குறைத்து கொடுக்கின்றனர். சில பயணிகள் வழியில் செல்லும்போது கொஞ்சமாகவும் வாங்குகின்றனர். ஒருசில பயணிகள் தங்களின் வீட்டிற்கு மற்றும் உறவினர்களின் வீட்டிற்கும் சேர்த்து வாங்கி செல்கின்றனர். போட்டிபோட்டுக்கொண்டு விற்னையில் வியாபாரிகள் ஈடுபடுவதால் வெள்ளரி வியாபாரம் அமோகமாக நடந்து வருகிறது.

இதுகுறித்து வெள்ளரி விற்பனையில் ஈடுபடும் வியாபாரிகள் கூறியதாவது: வெள்ளரிக்காய் சீசன் தொடங்கியுள்ளதால் வெள்ளரி விளையும் பகுதிக்கு நேரடியாக சென்று மொத்த விளைக்கு வாங்கி வந்து விற்பனை செய்ய தொடங்குவோம். மேலும் வெயிலுக்கு வெள்ளரி சாப்பிட்டால் உடலுக்கு நல்லது. இதனால் பேருந்தில் செல்லும் பயணிகள் இதனை அதிக அளவில் வாங்கி செல்கின்றனர். குறிப்பாக காலை, மாலை நேரத்தில் விற்பனை குறைவாகத்தான்  நடைபெறும். 11 மணிக்கு மேல் மாலை 5மணி வியாபாரம் பரபரப்பாக நடைபெறும். பயணிகள் தங்கள் வீட்டிற்கும், உறவினர்களுக்கும் அதிக அளவில் வாங்கி செல்கின்றனர். நாங்கள் தரமான வெள்ளரியை விற்பனை செய்கிறோம். அதனால் பயணிகள் முதலில் ஒன்று வாங்கி சாப்பிட்டுவிட்டு அதிகமாக வாங்கி செல்கின்றனர். இதனால் எங்களுக்கு நாளுக்கு நாள் விற்பனை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. ஒரு வியாபாரிகளுக்கு ரூ.500 முதல் ரூ.700 வரை லாபம் கிடைக்கிறது. இன்னும் வரும் நாட்களில் வெள்ளரிக்காய் விற்பனை அமோகமாக இருக்கும் என்றனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Cuttle ,start ,merchants , summer, cucumber, merchants
× RELATED வணிகர் சங்கங்களின் பேரமைப்பு...