×

புயல் சின்னம் எதிரொலி : விவசாயிகளுக்கு கை கொடுக்குமா கோடை மழை?

மணமேல்குடி: தமிழகத்தில் சில நாட்களாக கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து வருகிறது. இந்நிலையில் வானிலை மையம் கோடைமழை பெய்யக்கூடும் என்று அறிவித்திருந்தது. புதுக்கோட்டை மாவட்டத்தை பொறுத்தவரை வறட்சி மிகுந்த மாவட்டமாக கருதப்படுகிறது. இம்மாவட்டத்தில் வெப்பநிலை 95 டிகிரிக்கு மேல் அடித்து வருகிறது. இதனால் அனைத்து மக்களும் வீட்டை விட்டு வெளியே வரவே அச்சப்படுகிறார்கள். மேலும் பல பகுதிகளில் நீர்நிலைகள் வறண்டு நிலத்தடி நீர்மட்டமும் குறைந்து விவசாயிகளும் பெரும் கஷ்டத்திற்கு உள்ளாகியிருக்கிறார்கள். இந்நிலையில் கடந்த நான்கு நாட்களாக நள்ளிரவில் பெரும் மேக மூட்டங்கள் சூழ்ந்து இடியுடன்  கடும் மழையும் பொழிந்து வந்தது.

தினமும் சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேல் பெய்த கன மழையால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. இதனால் விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சியடைந்தனர். இருப்பினும் இம் மழையால் குளங்களும், ஏரிகளும் நிரம்பவில்லை என்று பொதுமக்களும் விவசாயிகளும் வேதனை தெரிவித்துள்ளனர். இதற்கு காரணம் நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர்வாரப்படாதது தான் என்று குற்றம் சாட்டுகின்றனர். கட்டுமாவடி, காரக்கோட்டை , கிருஷ்ணாஜிப்பட்டினம், திணையாகுடி, சிங்கவனம், இடையாத்திமங்கலம், தண்டலை, மணமேல்குடி, கோட்டைப்பட்டினம், மீமிசல்  மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில்  உள்ள  குளங்களும், ஏரிகளும்  ஆக்கிரமிப்புகளால் தூர்வாரப்படாததால்  வறண்டு காணப்படுகிறது.

இன்னும் ஒருசில ஏரிகளில் கருவேல மரங்கள் சூழ்ந்து காணப்படுகிறது. கடந்த நான்கு ஆண்டுகளாகவே  பருவ மழை பொய்த்ததால் இப்பகுதிகளில்  கடும் வறட்சி நிலவுகிறது. இது மாதிரியான காலகட்டங்களில் ஆடு, மாடு இவற்றின் உணவான புல் வகைகள் இல்லாமல் அனைத்து நிலங்களும் காய்ந்து வறண்டு கிடக்கின்றன. ஆடு, மாடுகளுக்கு தேவையான குடிதண்ணீர் கூட கிடைப்பதில்லை. இதனால் ஆடு, மாடுகளை குறைந்த விலைக்கு விற்பனை செய்யக்கூடிய நிலை ஏற்படுகிறது. இன்னும் நிலத்தடி நீர் மட்டமும் வெகுவாக குறைந்து வருவதால் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. மேலும் மணமேல்குடி பகுதிகளில் குடிதண்ணீரை ஒரு குடம் பத்து ரூபாய் என்று வாங்க வேண்டியுள்ளது.

மழை காலத்தில் கண்மாய்கள், குளங்களை விவசாயிகள் விவசாயத்துக்கு பயன்படுத்தி வந்தனர். தற்போது பல பெரிய கண்மாய்கள், குளங்கள் பராமரிப்பு இல்லாததால் கருவேல மரங்கள் சூழ்ந்துள்ள நிலையில் பயனற்று கிடக்கின்றன. இதனால் மழை காலங்களில் தண்ணீரை சேமித்து வைக்க முடியவில்லை. இதனால் விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் புதிய புயல் சின்னம் உருவாகி இருப்பதால் சில நாட்களுக்கு மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்திருக்கிறது. எனவே இம்மழை வருவதற்கு முன் ஏரி, கண்மாய் மற்றும் குளங்களை தூர்வாரி ஆக்கிரமிப்பை அகற்றினால் மழை நீரை சேகரிக்க முடியும்.எனவே மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து குளங்கள் ஏரிகளை தூர்வாரி ஆழப்படுத்த வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாகும்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Storm, farmers, summer
× RELATED யானை தாக்கி விவசாயி பலி