×

இலங்கையில் 8 இடங்களில் தாக்குதல் நடத்திய ஐ.எஸ். தீவிரவாதிகள் 7 பேரின் பெயரை வெளியிட்டது: இலங்கை புலனாய்வு பிரிவு

கொழும்பு: இலங்கையில் 8 இடங்களில் தாக்குதல் நடத்திய ஐ.எஸ். தீவிரவாதிகள் 7 பேரின் பெயரை இலங்கை புலனாய்வு பிரிவு வெளியிட்டது. இலங்கையில் கடந்த ஞாயிறு அன்று ஈஸ்டர் பிரார்த்தனை நடந்த 3 தேவாலயங்கள், 3 ஓட்டல்கள் உட்பட 8 இடங்களில் தொடர் வெடிகுண்டு தாக்குதல் நடந்தது. இதில், 45 குழந்தைகள் உட்பட 300க்கும் மேற்பட்டோர் பலியாயினர். உலகையே உலுக்கிய இக்கொடூர தாக்குதலுக்கு ஐஎஸ் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவுவதால், நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. வெடிகுண்டு தாக்குதலுக்கு உதவியவர்களை கண்டுபிடிக்கும் முயற்சியில் இலங்கை பாதுகாப்பு படையினரும், சிஐடி மற்றும் போலீசாரும் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

160 தீவிரவாதிகள் ஊடுருவல்?

இந்நிலையில், பயங்கரவாத பயிற்சி பெற்ற 160 தீவிரவாதிகள் இலங்கையில் ஊடுருவியிருப்பதாக உளவுத்துறை ரகசிய தகவல் கொடுத்திருப்பதாக அங்குள்ள பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. அந்த தீவிரவாதிகள் உள்ளூரில் இயங்கும் தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பை சேர்ந்தவர்கள் என கூறப்படுகிறது. குறிப்பாக, அவர்களில் தற்கொலைப் படைத் தாக்குதல் நடத்தும் பயிற்சி பெற்றவர்களும் இருப்பதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும், தொடர் வெடிகுண்டு தாக்குதல் நடத்திய தற்கொலைப் படையின் தலைவன் ஜஹ்ரான் ஹஸ்மியின் கீழ் பயிற்சி பெற்றுள்ளனர் என்றும் கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து இலங்கையில் மீண்டும் பதற்றம் நிலவி வருகிறது.

கடைசி நிமிடத்திலும் எச்சரித்தது இந்தியா

இலங்கையில் தேவாலயங்களை குறிவைத்து பெரிய அளவில் தாக்குதல் சம்பவத்தை நடத்த சதித்திட்டம் தீட்டப்பட்டுள்ளது என இந்திய உளவு அமைப்புகள் இலங்கையை முன்கூட்டியே எச்சரித்துள்ளன. இதில் முதல் எச்சரிக்கை கடந்த 4ம் தேதியும், 2வது எச்சரிக்கை கடந்த 20ம் தேதியும் விடுக்கப்பட்டுள்ளது. பின்னர், கடந்த ஞாயிறு அன்று காலையில் கூட 3வது எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்பிறகு ஒரு மணி நேரத்தில் தொடர் வெடிகுண்டு தாக்குதல் நடந்திருக்கிறது. 3 முறை இந்தியா எச்சரிக்கை விடுத்தும், இலங்கை அரசு அதை அலட்சியப்படுத்தி உள்ளது. அதே சமயம், இந்தியா 3 முறை எச்சரித்தும், இத்தகவல்கள் எங்களுக்கு தெரியப்படுத்தவே இல்லை என அதிபர் சிறிசேனாவும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவும் கூறி வருகின்றனர்.

பலி 359 ஆனது

குண்டுவெடிப்பு தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை நேற்று 359 ஆக அதிகரித்தது. இதில் 10 பேர் இந்தியர்கள் ஆவர். பலியானவர்களில் 37 வெளிநாட்டினர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். சுமார் 500 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் இது குறித்து 8 இடங்களில் தாக்குதல் நடத்திய ஐ.எஸ். தீவிரவாதிகள் 7 பேரின் பெயரை இலங்கை புலனாய்வு பிரிவு வெளியிட்டது. அபு உபெய்தா, அபு அல் முக்தார், அபு கலீல், அபு ஹம்ஸா, அபு முஹம்மத், அபு அல் பாரா, அபு அப்துல்லா ஆகியோர் தாக்குதல் நடத்தினர் என்று இலங்கை அரசு கூறியுள்ளது. ஐ.எஸ்.அமைப்பில் இணைந்ததால் பெயருக்கு முன்னாள் அபு என்ற பெயரை தீவிரவாதிகள் இணைத்துக்கொண்டதாக புலனாய்வு அமைப்பு தெரிவித்துள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : ISIS ,places ,terrorists ,Sri Lanka ,persons ,Sri Lanka Intelligence Division , Sri Lanka, attack, ISS Terrorists, Sri Lanka intelligence wing
× RELATED தமிழ்நாட்டில் 5 நாட்களுக்கு ஓரிரு...