×

2வது சுற்றில் சாய்னா, சிந்து

வுஹான்: ஆசிய பேட்மின்டன் சாம்பியன்ஷிப் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் விளையாட, இந்தியாவின் நட்சத்திர வீராங்கனைகள் சாய்னா நெஹ்வால், பி.வி.சிந்து தகுதி பெற்றனர். சீனாவின் வுஹான் நகரில் நேற்று தொடங்கிய இந்த தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில், சாய்னா நெஹ்வால் உள்ளூர் வீராங்கனை ஹான் யூவுடன் மோதினார். முதல் செட்டை 11-21 என்ற கணக்கில் இழந்து பின்தங்கிய சாய்னா, பின்னர் சுதாரித்துக் கொண்டு விளையாடி அடுத்த 2 செட்களையும் 21-11, 21-17 என்ற கணக்கில் கைப்பற்றி 2வது சுற்றுக்கு முன்னேறினார். அதில் அவர் தென் கொரியாவின் கிம் கா இயுனுடன் மோதுகிறார்.

மற்றொரு முதல் சுற்றில் களமிறங்கிய பி.வி.சிந்து 21-14, 21-7 என்ற நேர் செட்களில் ஜப்பானின் டகாஹஷி சயாகாவை மிக எளிதாக வீழ்த்தினார். இப்போட்டி 28 நிமிடத்திலேயே முடிவுக்கு வந்தது குறிப்பிடத்தக்கது. சிந்து தனது 2வது சுற்றில் இந்தோனேசியாவின் சோய்ருன்னிசாவை எதிர்கொள்கிறார். ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்திய வீரர் சமீர் வர்மா 21-13, 17-21, 21-18 என்ற செட் கணக்கில் ஜப்பானின் சகாய் கஸுமசாவை வென்றார். அடுத்து அவர் ஹாங்காங்கின் லாங் ஆங்கசுடன் மோதுகிறார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Saina ,round ,Sindhu , Saina, Sindhu
× RELATED கிராம புறங்களில் உள்ள மருத்துவமனைகளை...