×

வடகொரிய அதிபர் ரஷ்யா வருகை புதின் - கிம் இன்று முக்கிய பேச்சு

மாஸ்கோ: வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை சந்திப்பதற்காக  நேற்று ரஷ்யா வந்துள்ளார். அவர்கள் இருவரும் இன்று சந்தித்து முக்கிய  பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.
வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன், அமெரிக்க அதிபர் டிரம்புடன் 2 கட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தி உள்ள நிலையில், தனது நட்பு நாடான ரஷ்யாவுடனும் பேச்சு நடத்த விரும்பினார். இதனையடுத்து அவர் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை சந்திக்க திட்டமிட்டார். இதுகுறித்த தகவல்கள் கடைசி நிமிடம் வரை ரகசியமாக வைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில், கிம் ஜாங் உன் தனது பிரத்யேக  பச்சை நிற ரயில் மூலம், ரஷ்யாவின் துறைமுக நகரான விளாடிவோஸ்டாக்கில் உள்ள  கசான் ரயில் நிலையத்துக்கு நேற்று வந்தார். அங்கு அவருக்கு சிவப்பு கம்பள  வரவேற்பு அளிக்கப்பட்டது.

கிராமிய உடையணிந்த ரஷ்ய பெண்கள் பாரம்பரிய  முறைப்படி ரொட்டி மற்றும் உப்பு கொடுத்து அவரை வரவேற்றனர். பின்னர் ரஷ்ய  ஊடகங்களுக்கு பேட்டி  அளித்த அவர், தனது பயணம் வெற்றிகரமாகவும் பயனுள்ளதாகவும் அமையும் என்று  நம்புவதாக கூறினார். இன்று விளாடிவோஸ்டாக் நகருக்கு வரும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன்னை சந்தித்து முக்கிய பேச்சுவார்த்தை நடத்துகிறார். இந்த பேச்சுவார்த்தையின்போது, கொரிய தீபகற்பத்தில் நிலவும் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பது, வட கொரியாவின் முன்னேற்றம், இரு நாடுகளுக்கு இடையிலான உறவை மேம்படுத்துதல் ஆகியவை குறித்து பேசப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே வடகொரியா மீது அமெரிக்கா  விதித்துள்ள பொருளாதார தடையை நீக்குவதற்கு  ரஷ்யாவின் ஆதரவைக் கோருவதற்காக  வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் இங்கு வந்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
இதைத் தொடர்ந்து, நாளை  விளாடிவோஸ்டாக் நகரில் நடைபெறும் ரஷ்யாவின் புகழ்பெற்ற `பாலே’ நடனம்  உள்ளிட்ட கலாச்சார நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் கிம் ஜாங் உன் அங்குள்ள மீன்  கண்காட்சியகத்தை பார்வையிட உள்ளதாக ரஷ்ய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதுகுறித்து பேசிய  ரஷ்ய வெளியுறவு கொள்கை செயலாளர் யூரி உஷகோவ், ‘‘கொரிய தீபகற்பத்தில் நிலவும்  அணு ஆயுத பிரச்னை, அரசியல் ஆகியவற்றை கருத்தில் கொண்டு தீர்வு காணப்படும்.  இதற்காக அனைத்து வழிகளிலும் உதவ ரஷ்யா தயாராக இருக்கிறது’’ என்றார்.

இரு அதிபர்கள் இடையே நடக்கும் முதல் முக்கிய  பேச்சுவார்த்தை இது என்பதால் உலக நாடுகள் உன்னிப்பாக கவனித்து வருகின்றன. இதற்கு முன்னர் சீன அதிபர் ஜி ஜின்பிங்கை 4 முறையும், தென் கொரிய அதிபர் மூன் ஜே இன்னை 3 முறையும் கிம் ஜாங் உன் சந்தித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Russia - Kim ,North Korean ,Visit , North Korea, Russia, the puzzle - Kim
× RELATED போருக்கு தயாராகுங்கள்: ராணுவ தளத்தை பார்வையிட்ட வடகொரியா அதிபர் கிம் ஆணை