×

2 வாரமாக துப்புரவு ஊழியர்கள் பணிக்கு வராததால் தெருக்களில் தேங்கிய குப்பைகள்

ஆவடி: ஆவடி, காமராஜர் நகர் மற்றும் சுற்றுப்புறங்களில் பல்வேறு தெருக்களில் குப்பைகள் அகற்றாததால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. ஆவடி நகராட்சியில் காமராஜர் நகர், லாசர் நகர், தேவி நகர், நந்தவனமேட்டூர், குமரன் நகர், விளிஞ்சியம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார்  ஒரு லட்சம் மக்கள் வசிக்கின்றனர். இதில் நூற்றுக்கும் மேற்பட்ட தெருக்களில் தனியார் ஒப்பந்த ஊழியர்கள்  மூன்று சக்கர வண்டிகளில் தெருக்கள், வீடுகளில் சேரும் குப்பைகள் அகற்றப்பட்டு வந்தது. இந்நிலையில் இந்த பகுதியில் கடந்த இரண்டு வாரமாக குப்பைகளை அகற்ற ஒப்பந்த துப்புரவு ஊழியர்கள் வருவதில்லை. இதனால் பல தெருக்களில் குப்பைகள் குவிந்து கிடப்பதால் சுகாதார சீர் கேடு ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘‘ஆவடியின் மைய பகுதியான காமராஜர் நகர் பகுதியில் குப்பைகள் சரிவர அள்ளுவதில்லை. இங்குள்ள பிரதான சாலை,  தெருக்களில் குப்பைகள் ஆங்காங்கே குவிந்து கிடக்கிறது. மேலும், பல இடங்களில் சாலைகளில் வைக்கப்பட்ட பெரும்பாலான குப்பை தொட்டிகளை நகராட்சி நிர்வாகம் அப்புறப்படுத்திவிட்டது. இதனால், குடியிருப்போர் அப்பகுதியில் உள்ள சாலை ஓரங்களில் தான் குப்பைகளை கொட்டி வருகின்றனர். இதனால் கடும் துர்நாற்றம் வீசுகிறது. எனவே தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது.

ஆட்டோக்கள் அடிக்கடி பழுது
இதுதொடர்பாக சமூக ஆர்வலர்கள் பல முறை புகார் கூறியும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் அலட்சியமாக உள்ளனர். எனவே, நகராட்சி உயர் அதிகாரிகள் கவனித்து உடனடியாக தலையிட்டு ஆவடி காமராஜர் நகர் பகுதிகளில் குவிந்து கிடக்கும் குப்பைகளை உடனுக்குடன் அள்ளவும், சுகாதார சீர்கேட்டை தடுக்கவும்  நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர். சமூக ஆர்வலர்கள் கூறுகையில், ‘‘கடந்த பல ஆண்டாக நகராட்சி நிர்வாகம் தெரு, வீடுகளில் உள்ள குப்பைகளை மூன்று சக்கர வண்டிகள் மூலம் அப்புறப்படுத்தியது. இப்பணியில் தனியார் ஒப்பந்த நிறுவனம் வாகனங்கள், ஊழியர்களுடன் ஈடுபட்டு வந்தனர்.

பின்னர், அவர்களது ஒப்பந்தம் விலக்கிக்கொள்ளப்பட்டது. தற்போது, கடந்த இரு மாதங்களாக பேட்டரி ஆட்டோக்கள் மூலம் தனியார் ஒப்பந்த ஊழியர்கள் குப்பைகளை சேகரித்து வருகின்றனர். இந்த ஆட்டோக்கள் அடிக்கடி பழுதடைகிறது. இதனால் குப்பை அகற்றும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக நகராட்சி மைய பகுதியான காமராஜர் நகரில் சுகாதார சீர் கேடு ஏற்பட்டு மக்கள் அவதிப்படுகின்றனர். இதுகுறித்து அதிகாரிகள் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : street , Cleaning staff, stagnant debris
× RELATED சுகாதாரமான குடிநீர் வழங்க வேண்டும்