×

டெல்லியின் பணக்கார வேட்பாளர்: கவுதம் கம்பீருக்கு ரூ.147 கோடி சொத்து

தலைநகர் டெல்லியின் 7 தொகுதியில் போட்டியிடும் 349 வேட்பாளர்களில், பாஜ சார்பில் போட்டியிடும் கிரிக்கெட் விரர் கவுதம் கம்பீர் சுமார் ரூ.147 கோடி சொத்து மதிப்புடன் முதலிடத்தை பிடித்து பணக்கார வேட்பாளர் அந்தஸ்தை பெற்றுள்ளார். டெல்லி மக்களவை தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு அடுத்த மாதம் 12ம் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் நேற்றுடன் முடிவடைந்தது. கடைசி நாளான நேற்று பிரதான கட்சிகளின் முக்கிய வேட்பாளர்கள் மற்றும் நட்சத்திர அந்தஸ்து பெற்றவர்கள் தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர்.

அதில் பாஜ சார்பில் கிழக்கு டெல்லி தொகுதியில் போட்டியிடும் முன்னாள் கிரிக்கெட் பிரபலம் கவுதம் கம்பீரும் தனது மனுவை தாக்கல் செய்தார். அவர் தனது வேட்புமனுவில், 2017-18ம் நிதியாண்டில் தனது ஆண்டு வருமானம் ரூ.12.40 கோடி எனவும், மனைவியின் ஆண்டு வருமானம் ரூ.6.15 லட்சம் எனவும் தெரிவித்துள்ளார். ஒட்டுமொத்த சொத்து மதிப்பு ரூ.147 கோடி எனவும் கம்பீர் தனது வேட்புமனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இதன் மூலம்,   மற்ற  வேட்பாளர்களை காட்டிலும் இவரே டெல்லியின் பணக்கார வேட்பாளர் என்கிற அந்தஸ்தை பெற்றுள்ளார். இவருக்கு அடுத்தபடியாக மேற்கு டெல்லி தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் மகிபால் மிஸ்ரா இரண்டாம் இடத்தில் உள்ளார். இவரது மொத்த சொத்து மதிப்பு ரூ.45 கோடி. கடந்த 2014 மக்களவை தேர்தலுக்கு பின்னர் இவரது சொத்து மதிப்பு ரூ.12 கோடி அதிகரித்துள்ளது.

இதேபோன்று, தெற்கு டெல்லியில் காங்கிரசின் சார்பில் நிறுத்தப்பட்டுள்ள மற்றொரு பிரபலம் குத்து சண்டை சாம்பியன் வீஜேந்தர் சிங். இவரது ஆண்டு வருமானம் ரூ. 45 லட்சம் எனவும், மொத்த சொத்து மதிப்பு ரூ.12.14 கோடி எனவும் தெரிவித்துள்ளார். முன்னாள் முதல்வரும் வடகிழக்கு டெல்லி காங்கிரஸ் வேட்பாளருமான ஷீலா தீட்சித்தின் சொத்து மதிப்பு ரூ.4.92 கோடி என குறிப்பிட்டுள்ளார்.

இவருக்கு நிஜாமுதீன் ஏரியாவில் உள்ள அடுக்குமாடி வீட்டின் தற்போதைய சந்தை மதிப்பு ரூ.1.88 கோடி என தெரிவித்துள்ளார். இவரது சொத்து மதிப்பில் கடந்த தேர்தலுக்கு பின்னர் ரூ.2.1 கோடி உயர்ந்துள்ளது. மேலும், திக்‌ஷித்தின் வரிக்குட்பட்ட ஆண்டு வருவாய் ரூ.15 லட்சம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்றொரு காங்கிரஸ் வேட்பாளரான அஜய் மாகென் புதுடெல்லி தொகுதியில் நிறுத்தப்பட்டுள்ளார். இவரது ஆண்டு வருவாய் ரூ.26.38 லட்சம்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Delhi ,candidate ,Gautam Gambhir , Delhi, rich candidate, Gautam Gambhir, property
× RELATED எம்.எஸ்.தோனி இந்தியாவுக்கு கிடைத்த...