×

நீட் தேர்வு மையம் அமைப்பில் எந்த குளறுபடியும் இல்லை; அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்

சென்னை: தமிழகத்தில் நீட் தேர்வு மையங்கள் அமைப்பதில் எந்த குளறுபடியும் இல்லை. மாணவர்களுக்கு தேவையான வசதிகளை அரசு செய்து கொடுக்கும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். மருத்துவப் படிப்பில் சேர உள்ள மாணவ -மாணவியர் நீட் தேர்வை கட்டாயம் எழுத வேண்டும் என்று மத்திய அரசு கொண்டு வந்துள்ள விதியின் அடிப்படையில் தமிழகத்தில் இந்த ஆண்டும் நீட் தேர்வு மே மாதம் நடக்கிறது. இதற்காக தமிழகத்தில் ஆயிரக்கணக்கில் விண்ணப்பித்துள்ள மாணவ- மாணவியருக்கு தேர்வு மையங்கள் ஒதுக்குவதிலும், தேர்வு மைய குறியீட்டு எண்களை ஒதுக்கியுள்ளதில் பல குளறுபடி நடந்துள்ளது என்றும் பலருக்கு வேறு மாவட்டங்களில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் பொதுமக்கள் மற்றும் கல்வியாளர்கள் குற்றம்சாட்டினர்.

இது பல்வேறு ஊடகங்களில் வெளியானது. இதையடுத்து தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியதாவது: தமிழகத்தில் நீட் தேர்வு மையங்கள் தொடர்பாக  எந்த குளறுபடியும் இல்லை. நீட் தேர்வு தொடர்பாக எந்த சந்தேகம் இருந்தாலும் மாணவர்கள் கல்வி அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம். தமிழக அரசும் மாணவர்களுக்கு அனைத்து உதவிகளையும் செய்யத் தயாராக உள்ளது. பெரும்பாலான மாணவர்கள் விண்ணப்பத்தில் குறிப்பிட்டுள்ள தேர்வு மையங்களே ஒதுக்கப்பட்டுள்ளது. அந்தந்த மாவட்டங்களில் ஒதுக்கப்பட்டுள்ளது. அதில் ஏதாவது பிரச்னை இருந்தால் கல்வி அதிகாரிகளை தொடர்பு கொண்டால் அவர்கள் அதற்கான ஏற்பாடுகளை செய்வார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Chengottiyan , The choice of the nut, the messy, the minister, the red cotton
× RELATED பள்ளி மாணவர்களுக்கு கடந்தாண்டு...