×

பட்டியலில் பெயர் இல்லாமல் வாக்களித்தது எப்படி? தேசிய அளவில் விவாதப்பொருளாகிய சிவகார்த்திகேயன், ஸ்ரீகாந்த் விவகாரம்: நடவடிக்கை எடுக்க முடியாமல் தேர்தல் ஆணையம் திணறல்

சென்னை: வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாமல் வாக்களித்த நடிகர்கள் சிவகார்த்திகேயன், ஸ்ரீகாந்த் விவகாரம் தேசிய அளவில் விஸ்வரூபம் எடுத்துள்ளது. ஆனால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியாமல் தேர்தல் ஆணையம் திணறி வருகிறது. இதுகுறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு சென்னை, தலைமை செயலகத்தில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: நடிகர் சிவகார்த்திகேயன் வாக்களித்தது தொடர்பாக மாவட்ட தேர்தல் அதிகாரிகள் தெளிவான அறிக்கை அளித்துள்ளனர். அதன்படி, சிவகார்த்திகேயன் பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால், பெரும்புதூர் மக்களவை தொகுதியில் உள்ள மதுரவாயல் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வளசரவாக்கத்தில் குட்ஷெப்ேபட் பள்ளியில் அமைந்துள்ள 303வது வாக்குச்சாவடியில், அவரை தேர்தல் அலுவலர்கள் வாக்களிக்க அனுமதித்துள்ளனர். சம்பந்தப்பட்ட ஓட்டுச்சாவடி அலுவலர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க திருவள்ளூர் மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

அதேபோன்று, நடிகர் ஸ்ரீகாந்த் பெயரும் வாக்காளர் பட்டியலில் இல்லை. அவர் விருகம்பாக்கத்தில் ஓட்டுபோட்டதாகவும், அதற்கு அடையாளமாக கை விரலில் மை வைத்துள்ளதாகவும் கூறியுள்ளார். அதற்கான வீடியோ ஆதாரங்களும் எனக்கு புகாராக வந்துள்ளது. ஆனால், வாக்குச்சாவடி அலுவலர்கள் அவர் வாக்களிக்கவில்லை என்று கூறியுள்ளனர். இதுபற்றி, உறுதியான அறிக்கை அளிக்கும்படி சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் கேட்டுள்ளேன். நடிகர்கள் சிவகார்த்திகேயனும், காந்தும் பத்திரிகையாளர்களுக்கு பேட்டி கொடுத்துள்ளனர். நாங்கள் தொடர்ந்து இதே வாக்குச்சாவடியில்தான் ஓட்டு போடுவோம் என்றும் கூறி உள்ளனர். அப்படி இருக்கும்போது, அவர்களின் பெயர்கள் எப்படி வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது என்றும் விசாரணை நடத்தப்படும். பெயர் இல்லாமல் வாக்களிக்க ஏன் அனுமதித்தார்கள் என்றும் விசாரணை நடத்தப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்படும். வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாமல், சிவகார்த்திகேயன் வாக்களித்தது தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையத்துக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஒரு ஓட்டுக்காக மறுவாக்குப்பதிவு நடக்காது. ஒருவேளை, அந்த தொகுதியில் இரண்டு வேட்பாளர்கள் ஒரே எண்ணிக்கையில் ஓட்டுக்கள் வாங்கி, வெற்றி தோல்வி முடிவு தெரியாதபட்சத்தில் அதுகுறித்து பரிசீலிக்கப்படும்.
மதுரை தொகுதியில் பதிவான வாக்குகள் பாதுகாப்புடன் வைக்கப்பட்டிருந்த ஸ்டிராங்க் ரூமுக்குள் பெண் வட்டாட்சியர் எதற்காக சென்றார் என்பது குறித்து கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரி பாலாஜி மதுரை சென்று நேரடியாக நடத்திய விசாரணை குறித்த விரிவான அறிக்கையை என்னிடம் சமர்ப்பித்துள்ளார். இந்த அறிக்கை, இந்திய தேர்தல் ஆணையத்துக்கு நேற்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கை அடிப்படையில், மதுரை ஆட்சியர் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா, இல்லையா? என்பது குறித்து எதுவும் நான் கூற முடியாது. இந்திய தேர்தல் ஆணையம்தான் முடிவு செய்யும்.

அதேபோன்று, கரூர் தொகுதியில் வாக்குப்பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள ஸ்டிராங்க் ரூமுக்கு போதிய பாதுகாப்பு வழங்கப்படவில்லை என்று காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி புகார் கொடுத்துள்ளார். அதனால், சென்னையில் இருந்து கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரி ராஜாராமன் இன்று நேரடியாக கரூர் சென்று, பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து பார்வையிடுவார். அதன்பிறகு தேவைப்பட்டால் கூடுதல் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்படும். நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வேலூர் தொகுதிக்கு எப்போது ேதர்தல் நடைபெறும் என்பது குறித்து இந்திய தேர்தல் ஆணையம்தான் முடிவு செய்யும். வருகிற மே 19ம் தேதி நடைபெறுமா என்பது பற்றி எதுவும் உறுதியாக கூற முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.

பறக்கும் படை சோதனை தொடரும்
தமிழகத்தில் தற்போது 4 சட்டமன்ற தொகுதிக்கு அடுத்த மாதம் 19ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதைத்தொடர்ந்து தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிக்கு ஒரு பறக்கும் படையினர் என்ற வகையில் இன்று முதல் அவர்கள் தொடர்ந்து வாகன சோதனையில் ஈடுபடுவார்கள். 4 சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மாவட்டங்களில் மட்டும் 3 பறக்கும் படையினர், 3 கண்காணிப்பு குழுவினர் வாகன சோதனை நடத்துவார்கள். சூலூர் தொகுதி திருப்பூர், கோவை ஆகிய இரண்டு மாவட்டத்துக்குள் வருவதால் அங்கு மட்டும் 6 பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபடுவார்கள். ஓட்டப்பிடாரம் தொகுதிக்கு உட்பட்ட தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று முன்தினம் பறக்கும் படை நடத்திய வாகன சோதனையில் ரூ50 ஆயிரத்துக்கு மேல் முறையான ஆவணங்கள் இல்லாமல் எடுத்துச் சென்றதாக ரூ6.84 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் மே 23ம் தேதி வரை தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருக்கும் என்று தலைமை தேர்தல் அதிகாரி கூறினார்.

உதவித்தொகை ரூ30 லட்சமாக உயர்வு
தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு கூறும்போது, “தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்கள், தனியார் ஊழியர்கள் எதிர்பாராதவிதமாக விபத்து அல்லது மாரடைப்பு மற்றும் பிற காரணங்களால் மரணம் அடைந்தால் ரூ10 லட்சம் வழங்கப்பட்டு வந்தது. இது ரூ15 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோன்று, பயங்கரவாதிகள் நடத்தும் துப்பாக்கி சூடு, குண்டு வெடிப்பு உள்ளிட்ட காரணங்களால் மரணம் அடைய நேரிட்டால் அவர்களுக்கு ரூ20 லட்சம் என்பது ரூ30 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோன்று, விபத்தில் அல்லது பயங்கரவாத செயல்களில் பலத்த காயம் அடைந்தவர்கள், கண் பாதிப்பு ஏற்படுபவர்களுக்கு ரூ7.5 லட்சம் வழங்க இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்த அறிவிப்பு அனைத்து மாநில தேர்தல் அதிகாரிகளுக்கும், மாநில தலைமை செயலாளர்களுக்கும் தேர்தல் ஆணையம் நேற்று அனுப்பி வைத்துள்ளது” என்றார். இது இந்த தேர்தலில் இருந்தே நடைமுறைக்கு வருவதாகவும் கூறினார்.

கள்ள ஓட்டா... நல்ல ஓட்டா?
பொதுவாக வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாமல் ஒருவர் வாக்களிக்க ஓட்டுச்சாவடிக்குள் சென்றால், கள்ள ஓட்டு போட வந்துள்ளார் என்று போலீசார் கைது செய்து விடுவார்கள். ஆனால், நடிகர்கள் என்பதால் ஓட்டுச்சாவடி அலுவலர்கள், போலீசார், அரசியல் கட்சியை சேர்ந்த வாக்குச்சாவடி முகவர்களும் இதற்கு உடந்தையாக இருந்துள்ளனர். இந்த விவகாரம் பத்திரிகை மூலமாக செய்தி வெளியானதால் தற்போது விஸ்வரூபமாகியுள்ளது. இதில், நடிகர்கள் கள்ள ஓட்டுதான் போட்டனர் என்று வெளிப்படையாக சொல்ல முடியாத நிலையில் தேர்தல் ஆணையம் உள்ளது. அதேநேரம், நடிகர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் முடியாமல் உள்ளனர். கடைசியில், வாக்குச்சாவடி அலுவலர்களாக செயல்பட்ட அரசு ஊழியர்களே பலிகடா ஆக்கப்பட்டு அவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கும் சூழ்நிலை தற்போது ஏற்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : EC ,Sivakarthikeyan ,Srikanth , List, how voted, Sivakarthikeyan, Srikanth, Election Commission, stutter
× RELATED சசி தரூருக்கு தேர்தல் ஆணையம்...