×

குரும்பப்பட்டி பூங்காவில் மரங்கள் வெட்டி சாய்ப்பு: சமூக ஆர்வலர் எதிர்ப்பு

சேலம்: சேலம் குரும்பப்பட்டி பூங்கா 11 ஹெக்டேர் பரப்பளவில் அமைந்துள்ளது. இங்கு தினமும் 1000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வருகின்றனர். வார இறுதியில் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் குடும்பத்தோடு  வருகின்றனர். இங்கு பெரியவர்களுக்கு ரூ.20, சிறுவர்களுக்கு ரூ.10 நுழைவு கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இந்த பூங்காவில் மான்கள், பறவைகள், குரங்குகள், முதலைகள் போன்ற விலங்குகள் உள்ளன. இந்த நிலையில், கடந்த இரண்டு நாட்களாக இந்த பூங்காவில் உள்ள பெரிய மரங்கள் வெட்டப்பட்டு லாரியில் கொண்டு செல்லப்பட்டு வருகிறது. இதுகுறித்து தகவல் கிடைத்ததும் சமூக ஆர்வலர் பியூஷ் சம்பவ இடம் விரைந்து  சென்றார். ஆனால் அவரை பூங்காவிற்குள் அனுமதிக்கவில்லை. அங்கிருந்த ஊழியர்கள், பூங்காவை மேம்பாடு செய்ய உள்ளோம். அதற்கான பணிகள் நடக்கிறது என்றனர். அதற்காக ஏன் மரங்களை வெட்டுகிறீர்கள் என கேட்டு  சமூக ஆர்வலர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

பின்னர் பியூஸ் கூறுகையில், ``வறட்சி காலங்களில் பூங்காவில் உள்ள மரங்களை வெட்டுவதற்கு அவசியம் கிடையாது. மரங்களை வெட்டுவதற்கு அனுமதி கொடுத்தது யார்? மரங்கள் அனைத்தும் வெட்டி கடத்தப்படுகிறது``  என்றார். இதுகுறித்து மாவட்ட வனஅலுவலர் கந்தசாமி கூறுகையில், ``குரும்பப்பட்டி பூங்காவிற்குள் தேவையில்லா மரங்கள், பட்டுப்போன மரங்கள், சீமை கருவேல மரங்கள், பொன்னாவரை மரம் ஆகிய மரங்களை வெட்ட  தலைமை அதிகாரி கூறியுள்ளார். இதுபோன்ற மரங்கள் எல்லாம் உள்ளே வரும் மக்களுக்கு இடையூறு ஏற்படுத்துகிறது. பட்டுப்போன மரம் முறிந்து விழுந்தால் உயிருக்கு ஆபத்து ஏற்படும். எனவே காய்ந்து போன மற்றும் சிறு  சிறு மரங்களும் வெட்டப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்களுக்கு நன்மை தரும் நாவல், வாழை, பலா உள்ளிட்ட மரங்களை ₹7 லட்சம் மதிப்பில் நடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது`` என்றார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : park ,Kurumbapatti , Kurumbapatti park, trees, social activist
× RELATED கோத்தகிரி நேரு பூங்கா கோடை சீசனுக்கு தயார்