×

களக்காட்டில் புதராக மாறிய தெப்பக்குளம் சீரமைக்க அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்குமா?

களக்காடு: களக்காட்டில் புதராக மாறிய தெப்பக்குளத்தை சீரமைக்க இந்து அறநிலையத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். களக்காடு திருக்கல்யாணத்தெரு ஆற்றாங்கரையில் சத்தியவாகீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான தபசு மண்டபம் உள்ளது. ஐப்பசி திருக்கல்யாண விழாவின் போது கோமதி அம்மன், முருகப்பெருமான். தெய்வானை அம்மன் இந்த மண்டபத்திற்கு எழுந்தருளி தபசு இருப்பது வழக்கம்.  அதுபோல வரதராஜபெருமாள், சத்தியவாகீஸ்வரர் கோயில் திருவிழாக்களின் போது சுவாமிகளுக்கு இந்த மண்டபத்தில் வைத்தே தீர்த்தவாரி நடைபெறும். இந்த மண்டபத்திற்கு பின்புறம் தமிழக  இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான தெப்பக்குளம் உள்ளது. இவை பல ஆண்டுகளாக பராமரிப்பு இல்லாமல் காணப்படுகிறது. குளத்தின் படிகள் இடிந்து பெயர்ந்துள்ளது. தடுப்புசுவர்கள்  தகர்ந்து மண்ணோடு மண்ணாகி விட்டது.

  தெப்பக்குளத்தின் உள்பகுதியில் செடி, கொடிகள் முளைத்துள்ளன. இதனால் தெப்பக்குளம் புதர்மண்டி காட்சி அளிக்கிறது. புதர்களில் பாம்பு உள்ளிட்ட விஷ பூச்சிகள் தஞ்சமடைந்துள்ளன.  அவைகள் அடிக்கடி அருகில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் உலா வருவதால் பொதுமக்கள் அச்சமடைகின்றனர். முன் காலத்தில் தபசு மண்டப்பத்தில் நடைபெறும் விழாக்களின் போது சுவாமிகளுக்கு அபிஷேகங்கள் நடத்த இந்த தெப்பக்குளத்தில் இருந்து தான் தண்ணீர் எடுக்கப்பட்டு வந்துள்ளது  குறிப்பிடத்தக்கது. தற்போது குளம் கவனிப்பார் இன்றி பாழடைந்து வருவது பக்தர்களுக்கு வேதனையை கொடுத்துள்ளது. எனவே புதராக மாறிய தெப்பக்குளத்தை சீரமைக்க இந்து  அறநிலையத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பக்தர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : charity ,field ,bush , Kalakkadu, Teppakulam, Charitable Sector
× RELATED தீ தொண்டு நாள் கடைபிடிப்பு