×

நரிக்குறவர்கள், ஆதரவற்றோர் தஞ்சம் பஸ் நிலையத்தில் நிற்க முடியாமல் தவிக்கும் பயணிகள்

நாகர்கோவில்: நாகர்கோவில் வடசேரி பஸ் நிலையத்தில் மொத்தம் 4 பிளாட்பாரங்கள் உள்ளன. இதில் திருநெல்வேலி, மதுரை, திருவனந்தபுரம் பஸ்கள் நிற்கும் பகுதிகளிலும், கன்னியாகுமரி, சாமித்தோப்பு, உவரி உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் பஸ்கள் நிற்கும் பிளாட்பாரத்திலும் பயணிகள் அதிகளவில் இருப்பார்கள். இந்த பிளாட்பாரங்களின் பெரும்பாலான பகுதியை ஆதரவற்றோரும், நரிக்குறவர்களும் ஆக்கிரமித்து உள்ளதால், பயணிகள் பெரும் சிரமத்துக்கு உள்ளாகி உள்ளனர். இவர்களின் போர்வையில் திருட்டு கும்பலும் புகுந்து அடிக்கடி பயணிகளின் உடமைகளையும், பணத்தையும் திருடி வருகிறார்கள். திருட்டுக்காக குழந்தைகளையும் பகடை காயாக பயன்படுத்துகிறார்கள். இதை தட்டிக்கேட்க யாரும் முன் வருவதில்லை. இவர்களை அப்புறப்படுத்த முயன்றால், காவல்துறையினரை அவதூறாக திட்டி தகராறு செய்கிறார்கள். இதுபோன்று தஞ்சம் அடைந்து உள்ள சிலர் குடிபோதையில் ஆபாச செய்கைகள் செய்வதும், ஆபாசமாக பேசி சண்டையிடுவதாலும் பயணிகள் நிற்க கூட முடியாத நிைல உள்ளது. கல்லூரி மாணவிகள், இளம்பெண்கள் பெரும்  இன்னல்களை சந்தித்து வருகிறார்கள். குறிப்பாக கன்னியாகுமரி பிளாட்பாரத்தில் நரிக்குறவர்கள் கடையும் விரிக்கிறார்கள்.

கைக்குழந்தைகளுடன் பிச்சையும் எடுக்கிறார்கள். இவர்கள் செய்யும் செய்கைகளால் பிளாட்பாரத்தில் நிற்க கூட முடிய வில்லை என்று பயணிகள் வேதனையுடன் கூறுகிறார்கள். புறக்காவல் நிலையத்தில் இருந்து போலீசார் வந்து இவர்களை கண்டித்தாலும் கேட்பதில்லை. எங்களை விரட்டினால் மனித உரிமை மீறல் என கூறி போலீசாரையே நடுநடுங்க வைக்கிறார்கள்.இதனால் காவல் துறையினரும், பெரிதாக இவர்களை கண்டு கொள்வது கிடையாது. இது போன்று ஆதரவற்றோருக்காக மத்திய அரசின் நிதி உதவியுடன் அபய கேந்திரம் செயல்படுகிறது. இவர்களை அங்கு அழைத்து சென்று, 3 வேளை உணவு வசதியுடன் தங்க வைத்தாலும் இவர்கள் இருப்பதில்லை. பிளாட்பாரத்துக்கே வந்து தஞ்சம் அடைகிறார்கள். இவ்வாறு தஞ்சம் அடைந்துள்ளவர்கள், நரிக்குறவர்கள் குழந்தைகளை வைத்து பிச்சை எடுக்கிறார்கள். குழந்தைகளை வைத்துக் பிச்சை எடுக்க கூடாது. குழந்தைகளை பாதுகாக்க வேண்டும் அவர்களை பள்ளியில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதற்காக குழந்தைகள் நல குழுமம், குழந்தை பாதுகாப்பு அலுவலர்,  குழந்தைகள் மற்றும் ஆள் கடத்தல் தடுப்பு பிரிவு என பல்வேறு பிரிவுகள் உள்ளன.

இதில் குழந்தைகள் நல குழுமம் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் என்பது மத்திய அரசின் பங்களிப்புடன் இயங்குகிறார்கள். இதற்காக சிறப்பு நிதிகளும் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. ஆனால் பஸ் நிலையத்தில் குழந்தைகளுடன் பிச்சை எடுப்பு என்பது தொடர் கதையாக உள்ளது.இரவில் உறங்கும் பெண் குழந்தைகளின் பாதுகாப்பும் கேள்விக்குறியாக மாறி உள்ளது. இது தொடர்பாக அதிகாரிகளிடம் கேட்ட போது, நாங்களும் பலமுறை அவர்களை எச்சரித்து பள்ளியில் சேர்க்க நடவடிக்கை எடுக்கிறோம். ஆனால் அவர்கள் கேட்பதில்லை. நரிக்குறவர்களுக்கு வள்ளியூர் அருகே வீடு, ரேஷன் கார்டுகள் போன்றவை உள்ளன. ஆனால் அவர்கள் அங்கு செல்வதில்லை. நாங்கள் என்ன செய்ய முடியும் என கூறுகிறார்கள். மத்திய, மாநில அரசுகள் பல லட்ச ரூபாய் செலவில் செயல்படுத்தும் திட்டம் இதனால் கேள்விக்குறியாகி விடுகிறது.இதற்கு முன் இருந்த கலெக்டர்கள் நடவடிக்கையின் பேரில் நரிக்குறவர்கள் அப்புறப்படுத்தப்பட்டு அவர்களுக்கு உண்டான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளனர்.

ஆனால் இப்போது யாரும் அவர்களை கண்டு கொள்வது கிடையாது என்பதும், இவர்களுக்கு வசதியாகி இருக்கிறது. எனவே பஸ் நிலைய பிளாட்பாரம் மற்றும் நடைபாதைகளில் இடையூறாக இருப்பவர்களை அவர்களின் வசிப்பிடங்களுக்கு அனுப்பி வைக்கவும் அல்லது ஆதரவற்றோர் இல்லமான அபயகேந்திரத்தில் சேர்க்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Passengers ,bus station , Lathis, asylum seekers, bus stand, passengers
× RELATED சென்னை விமான நிலையத்தில் ரூ.8 கோடி...