குற்ற வழக்குகளில் புலன் விசாரணையின் தரத்தை மேம்படுத்த தனி குழுவை அமைத்தது சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை: குற்ற வழக்குகளின் புலன் விசாரணை தரத்தை மேம்படுத்த தனி குழுவை அமைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் 28ம் தேதியன்று, குற்ற வழக்கில் கைது செய்யப்பட்டு 264 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஒருவருக்கு ஜாமீன் வழங்கிய சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் குற்ற வழக்குகளில் காவல்துறையினரின் புலன் விசாரணை தரம் தாழ்ந்துவிட்டதாக வேதனை தெரிவித்தார்.

இதனையடுத்து காவல் துறையினரின் புலன் விசாரணை நடைமுறைகளை மேம்படுத்துவதற்கான வழிகளை காண வேண்டும் எனக் குறிப்பிட்ட நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், தமிழகம் முழுவதும் 2018 டிசம்பர் வரை எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன? எத்தனை வழக்குகளில் குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டன? நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட வழக்குகள் எத்தனை? அவற்றின் முடிவுகள் என்ன? என்பன குறித்த விவரங்களை மாவட்ட வாரியாக 8 வாரங்களுக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்று தமிழக காவல்துறை டி.ஜி.பி.க்கு உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தார்.

இந்த நிலையில், இந்த வழக்கானது இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, டிஜிபி தாக்கல் செய்த அறிக்கையை படித்து பார்த்த நீதிபதி, இந்த அறிக்கையானது முழுமையானதாக இல்லை என்றும், விடுதலை எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் அதிருப்தி தெரிவித்தார். மேலும், மீண்டும் மீண்டும் வழக்கு போட்டு குற்றவாளிகள் மீண்டும் திருந்த முடியாத நிலைக்கு ஆளாக்கப்படுகிறார்கள். குற்றவாளிகள் எப்போதும் குற்றவாளிகளாகவே வைத்திருக்கப்படுகிறார்கள் எனவும் நீதிபதி வேதனை தெரிவித்தபர். இதையடுத்து, குற்ற வழக்குகளில் புலன் விசாரணை தரத்தை மேம்படுத்த ஓய்வுபெற்ற டிஜிபி ஆர்.நட்ராஜ் தலைமையில் 5 பேர் கொண்ட குழுவை அமைத்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

இந்த குழுவில், ஓய்வுபெற்ற காவல் கண்காணிப்பாளர் சித்தண்ணன், மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ, கிஷோர்குமார், அண்ணாநகர் துணை ஆணையர் சுதாகர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இந்த குழுவானது, குற்ற வழக்குகள் குறித்து மாவட்டம் வாரியாக முழு விவரங்களை திரட்டி 8 வாரங்களில் டிஜிபியிடம் அறிக்கை அளிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதுமட்டுமல்லாது, குற்றவாளிகள் சீர்திருத்தம், மறுவாழ்வு குறித்து ஆராய்தல் மற்றும் குற்ற வழக்குகளின் புலன் விசாரணை தரத்தை மேம்படுத்துவது குறித்து பரிந்துரை வழங்கவும் இந்த குழுவானது அமைக்கப்பட்டுள்ளதாக சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : committee ,Madras High Court ,investigation , Criminal case, investigation, group, council, high court
× RELATED சாலைகள் மோசமாக இருந்தால் சென்னை...