×

நாடு முழுவதும்வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு: சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் குற்றச்சாட்டு

லக்னோ: நாடு முழுவதும் வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு நடப்பதாகவும் யாருக்கு வாக்களித்தாலும் பாஜ சின்னத்தில் ஓட்டு பதிவாகிறதாகவும் சமாஜ்வாடி தலைவரும் உபி முன்னாள் முதல்வருமான அகிலேஷ் யாதவ் குற்றம் சாட்டியுள்ளார். மக்களவை 3ம் கட்டத் தேர்தல் நேற்று நடைபெற்றது. தேர்தலை 7 கட்டங்களிலும் சந்திக்கும் மாநிலங்களில் ஒன்றான உபி.யில் 10 தொகுதிகளில் நேற்று வாக்குப்பதிவு நடந்தது. இதில் எடவாவில் உள்ள சைபாய் தொகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் யாதவ் வாக்களித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசியதாவது: நாடு முழுவதும் வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு நடந்துள்ளது. எந்த கட்சிக்கு வாக்களித்தாலும் பாஜ சின்னத்தில் வாக்குப் பதிவாகிறது. வாக்குப்பதிவு இயந்திரத்தை முறையாக பயன்படுத்த தெரியாத 350க்கும் மேற்பட்ட அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டதாக தேர்தல் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

முறையான பயிற்சி இல்லாத அதிகாரிகளால் வாக்குப்பதிவு இயந்திரத்தை சரிவர இயக்க முடியவில்லை. இதுதான் மத்திய அரசு வாக்குறுதி அளித்த டிஜிட்டல் இந்தியாவா? இது 50,000 கோடி செலவில் நடத்தப்படும் தேர்தலை புறக்கணிக்கும் குற்றச்செயலாகும்.  மெயின்புரியை பொருத்தவரை முலயாம் சிங் யாதவ் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவது உறுதி. அதே போன்று பிரோசாபாத்தில் ஷிவ்பால் யாதவை எதிர்த்து போட்டியிடும் சமாஜ்வாடி வேட்பாளர் அக்‌ஷய் யாதவ் எளிதாக வெற்றி பெறுவார். ராம்பூர், படாவுன் தொகுதிகளில் உள்ள வாக்குப்பதிவு இயந்திர முறைகேடுகள் பற்றி தேர்தல் ஆணையம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார். இதனிடையே சமாஜ்வாடி எம்எல்சி. ராஜேந்திர சவுத்ரி தலைமையிலான குழு உபி தலைமை தேர்தல் அதிகாரி வெங்கடேஷ்வரை சந்தித்து, வாக்குப்பதிவு இயந்திர முறைகேடு குறித்து புகார் அளித்தனர்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Akhilesh ,Samajwadi , Samajwadi leader Akhilesh
× RELATED பாஜ வெற்றி பெற்றால் அரசியலமைப்பு...