×

வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள கட்டிடத்தை சூடான் மாணவர்கள் செல்போனில் படம் எடுத்தது ஏன்? அண்ணா பல்கலைக்கழகத்தில் பரபரப்பு

சென்னை: வாக்குப்பதிவு இயந்திரம் வைக்கப்பட்டுள்ள கட்டிடத்தை சூடான் நாட்டை சேர்ந்த கல்லூரி மாணவர்கள் புகைப்படம் எடுத்தது அண்ணா பல்கலைக்கழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. சென்னை மாவட்டத்தில் 3 நாடாளுமன்ற மற்றும் ஒரு சட்டமன்ற தொகுதிக்கு கடந்த 18ம் தேதி இடைத்தேர்தல் நடந்தது. சென்னையில் மொத்தம் 9,529 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன.

பின்னர் வட சென்னை தொகுதி, பெரம்பூர் இடைத்தேர்தலில் பயன்படுத்தப்பட்ட இயந்திரங்கள் காமராஜர் சாலையில் உள்ள ராணி மேரி கல்லூரியிலும், மத்திய சென்னை தொகுதியில் பயன்படுத்தப்பட்ட இயந்திரங்கள் லயோலா கல்லூரியிலும், தென் சென்னை தொகுதியில் பயன்படுத்தப்பட்ட இயந்திரங்கள் அண்ணா பல்கலைக்கழகத்திலும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையத்தில் வைக்கப்பட்டுள்ளன.

வாக்குப்பதிவு இயந்திரம் வைக்கப்பட்டுள்ள பகுதியை சுற்றிலும் சிசிடிவி கேமராக்கள் அமைக்கப்பட்டு 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மே 23ம் தேதி வரை சுழற்சி முறையில் 3 வாக்கு எண்ணும் மையங்களிலும் 3 துணை கமிஷனர் தலைமையில் 3 கூடுதல் துணை கமிஷனர்கள், 3 உதவி கமிஷனர்கள், 27 இன்ஸ்பெக்டர்கள், 54 சப்-இன்ஸ்பெக்டர்கள், 135 காவலர்கள், 300 ஆயுதப்படை காவலர்கள், 60 அதி தீவிர விரைவுப்படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், சூடான் நாட்டை சேர்ந்த காரி முகமது (23) என்பவர் குரோம்பேட்டையில் உள்ள பொறியியல் கல்லூரியில் இன்ஜினியரிங் படித்து வருகிறார். நேற்று முன்தினம் தன்னுடன் படிக்கும் அப்துல் ரகுமான் (19) என்பவருடன் அண்ணா பல்கலைக்கழகத்திற்கு வந்துள்ளார். பல்கலைக்கழக வளாகத்தை சுற்றி பார்த்த பிறகு, வாக்குப்பதிவு இயந்திரம் வைக்கப்பட்டுள்ள கட்டிடத்தை தனது செல்போனில் இருவரும் புகைப்படம் எடுத்தபோது பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் பார்த்துள்ளனர்.

உடனடியாக இரண்டு மாணவர்களையும் பிடித்து கோட்டூர்புரம் போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதுபற்றி நடத்தப்பட்ட விசாரணையில், விளையாட்டுக்காக வாக்குப்பதிவு இயந்திரம் வைத்துள்ள கட்டிடத்தை படம் பிடித்தோம் என்று கூறி மன்னிப்பு கேட்டனர். இதையடுத்து போலீசார், ‘இனி இதுபோன்ற செயல்களில் ஈடுபட மாட்டோம்’ என்று கடிதம் எழுதி வாங்கிக்கொண்டனர். இதன்பிறகு செல்போனில் பிடித்த படங்களை போலீசார் அழித்துவிட்டு அவர்களை எச்சரித்து அனுப்பினர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Sudan ,Anna University , Polling, machinery, building, Sudanese students, cellphone, film
× RELATED பதிவாளர் நியமனம் தொடர்பாக அண்ணா...