×

நிர்வாணப்படுத்தி சோதனை நடத்தியதால் கொதிப்பு மதுரை மத்திய சிறையில் போலீசார்-கைதிகள் மோதல்

*  மரங்கள், கட்டிடத்தில் ஏறி கோஷம்
* சரமாரி கல்வீச்சால் அதிரடிப்படை குவிப்பு

மதுரை: மதுரை மத்திய சிறைக்குள் கைதிகள், போலீசார் இடையே நேற்று பயங்கர மோதல் வெடித்தது. கற்களை வீசியும், மரங்களின் மீது நின்றபடி கோஷங்களை எழுப்பினர். இதனால் அப்பகுதியில் 3 மணிநேரத்திற்கும் மேலாக தொடர் பதற்றம் நிலவியது. மதுரை மத்திய சிறைச்சாலைக்குள் 1,600 தண்டனை மற்றும் விசாரணை கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். சிறைத்துறை டிஐஜி பழனி, எஸ்பி ஊர்மிளா தலைமையில் 300க்கும் அதிக போலீசார் சுழற்சி முறையில் பாதுகாப்பு, கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

சிறை வளாகத்திற்குள் மதிய உணவு வேளை முடிந்ததும், 3 மணியளவில் கைதிகளையும், அவர்களது அறைகளையும் போலீசார் தினமும் சோதனை நடத்துவது வழக்கம். இதன்படி நேற்று மாலை மதுரை சிறைக்குள் நடத்திய சோதனையில், 2 கைதிகளின் அறைக்குள் கஞ்சா, பிளேடு சிக்கின. இதனால் அவர்கள் இருவரையும் விசாரணைக்கு அழைத்து சென்றனர். அப்போது சிலரை நிர்வாணமாக்கி, அவர்களிடமும் போலீசார் சோதனை நடத்தி இருக்கின்றனர். இதுகுறித்து அறிந்த பிற கைதிகள் இதனை கண்டித்து வளாகப்பகுதிக்குள் ஒன்று திரண்டனர்.

போலீசார் பிடித்துச் சென்ற கைதிகளை மீட்கும் முயற்சியிலும் ஈடுபட்டனர். இதனால் கைதிகள், போலீசார் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டு, பிறகு மோதலாக உருவெடுத்தது. கைதிகள் ஒன்று திரண்டு அங்கு கிடந்த கற்களை வீசி தாக்கியதால் அதிர்ச்சியடைந்த போலீசார் அங்கிருந்து வெளியேறினர். இதன்பின் கைதிகள், மரங்கள், கட்டிடங்களின் மேல் ஏறி ‘போலீசார் சோதனை என்ற பெயரில் ஆசன வாயில் கஞ்சா மறைத்து வைத்திருப்பதாகக் கூறி, குச்சியால் குத்தி தங்களை மிகவும் கொடுமைப்படுத்துவதாகவும், குடிநீர், உணவு உட்பட அடிப்படை வசதிகள் இல்லை’ எனக்கூறியும் கோஷங்கள் எழுப்பினர்.

இந்த வேதனையை தெரிவிக்கும் விதமாக, சில கைதிகள் உடம்பில் கிழித்து காயப்படுத்திக் கொண்டனர். ஒரு சில கைதிகள் தொடர்ந்து கற்கள், தட்டு, டம்ளர் உள்ளிட்டவைகளை வீசிக் கொண்டே இருந்தனர். இதனால், சிறைக்கு 200க்கும் மேற்பட்ட அதிரடிப்படை போலீசார் வரவழைக்கப்பட்டனர். தொடர்ந்து, மாலை 6 மணி வரை கைதிகள் போராட்டத்தில் ஈடுபட்டதால், இப்பகுதியில் பதற்றம் நிலவியது.

பின்னர் சிறை அதிகாரிகள், கைதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். தாங்கள் நடத்திய போராட்டத்திற்காக தங்களை போலீசார் தாக்கக் கூடாது எனக் கோரிய கைதிகள், பின்னர் மரங்கள், கட்டிடங்களில் இருந்து கீழே இறங்கினர். கைதிகள் அனைவரும் அவரவர்கள் அறைக்குள் அடைக்கப்பட்டனர். சுமார் 3 மணிநேரம் நடந்த இந்த மோதலால் சிறை வளாகமே கலவரப்பகுதியாக காட்சியளித்தது.

மீண்டும் கலவரம்  வெடிக்கும் அபாயம்: சிறை போலீசார் சிலர் கூறும்போது, ‘‘ மதுரையில்  முன்னாள் மண்டலத்தலைவர்கள் வி.கே.குருசாமி, ராஜபாண்டி ஆகிய இரு பிரிவினரிடையே அடுத்தடுத்து பழிக்குப்பழியாக 19க்கும் அதிக கொலைகள் நடந்துள்ளன. இதேபோல் அவனியாபுரத்தில் செழியன், சிற்றரசு இரு பிரிவினரிடையே பழிக்குப்பழியாக 14க்கும் அதிக கொலைகள் நடந்துள்ளன.

இவ்விரு வழக்குகளில் தொடர்புடைய 50 கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இதுதவிர பல்வேறு வழக்குகளில் தொடர்புடையோரும் என, எந்நேரமும் சிறை வளாகத்திற்குள் பதற்றமான சூழலே நிலவுகிறது. போலீசார் மீதே கைதிகள் தாக்குதல் நடத்தி இருப்பது மிகவும் ஆபத்தானது. கூடுதல் போலீசார் நிறுத்தப்பட்டு பாதுகாப்பை பலப்படுத்துவது அவசியம். இல்லையெனில் நிச்சயம் மீண்டும் ஒரு  மிகப்பெரிய கலவரம் சிறைக்குள் வெடிக்கும். உயரதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுப்பது அவசியம்’’ என்று தெரிவித்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : police-detainees clash ,Madurai Central Jail , Nirvana, testing, boiling, Madurai Central prison, police-detainees, clash
× RELATED மதுரை மத்திய சிறை கைதிகளுக்கு பல் மருத்துவ முகாம்