×

தலைமை நீதிபதிக்கு எதிராக சதி நடப்பதாக தெரிவித்த வக்கீல் விளக்கம் தர உத்தரவு: உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை

புதுடெல்லி: போலியாக பாலியல் புகார் கொடுத்து, தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்க்கு எதிராக  சதி நடந்திருப்பதாக கூறிய வக்கீல் விளக்கம் அளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீது உச்ச நீதிமன்ற முன்னாள் பெண் ஊழியர் ஒருவர் பாலியல் குற்றச்சாட்டு எழுப்பி உள்ளார். இதுதொடர்பாக உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கு அவர் மனு அனுப்பி உள்ளார். இந்த குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்து தன்னை தரம்தாழ்த்திக் கொள்ள விரும்பவில்லை எனக்கூறிய தலைமை நீதிபதி, தனக்கு எதிராக மிகப்பெரிய சதி நடப்பதாகவும் கூறியிருந்தார்.இதற்கிடையே, உச்ச நீதிமன்ற வக்கீல் உத்சவ் சிங் பெயின்ஸ் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் பிரமாண பத்திரம் ஒன்றை தாக்கல் செய்தார். அதில் கூறியிருப்பதாவது:
தலைமை நீதிபதிக்கு எதிரான குற்றச்சாட்டை அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். அவருக்கு எதிராக மிகப்பெரிய சதி திட்டம் தீட்டப்பட்டுள்ளது.

அவர் மீது போலியாக பாலியல் புகார் கொடுப்பதற்கும், அது தொடர்பாக பத்திரிகையாளர் சந்திப்பை ஏற்பாடு செய்யவும் வேண்டி கார்ப்பரேட் நிறுவனத்தைச் சேர்ந்த ஒருவர் என்னை சந்தித்தார். முதலில் ₹50 லட்சம் தருவதாக  அந்த நபர் கூறினார். நான் மறுக்கவே ₹1.5 கோடி வரை தருவதாக கூறினார். உடனடியாக அவரை வெளியேற்றி விட்டேன். சம்மந்தப்பட்ட அந்த நபர், பணம் கொடுத்து வழக்குகளில் தீர்ப்பை மாற்றக்கூடிய அளவுக்கு செல்வாக்கு படைத்தவர். தலைமை நீதிபதிக்கு எதிரான இதுபோன்ற நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.இவ்வாறு  கூறியிருந்தார்.இந்த மனு நீதிபதிகள் அருண் மிஸ்ரா, நாரிமன், தீபக் குப்தா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இன்று காலை 10.30 மணிக்கு மனுதாரர் விளக்கம் அளிக்கக் கோரி நீதிபதிகள் விசாரணையை ஒத்தி வைத்தனர். ஏற்கனவே பாலியல் குற்றச்சாட்டு குறித்து தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு  விசாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Attorney-in-law ,Chief Justice , Against,Chief Justice,conspiracy,
× RELATED இளையராஜா வழக்கு விசாரணையில் இருந்து நீதிபதி விலகல்