×

இந்தியாவின் பெட்ரோல் தட்டுப்பாட்டை சவுதி அரேபியா ஈடுகட்டும் : அதிபர் டிரம்ப்

வாஷிங்டன் : ஈரானில் இருந்து எண்ணெய் இறக்குமதியை நிறுத்தினால் இந்தியாவின் பெட்ரோல் தட்டுப்பாட்டை சவுதி அரேபியா ஈடுகட்டும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். ஈரானின் அணு ஆயுத உற்பத்தி பிரச்சினையால் கடந்த 2015ம் ஆண்டு ஈரானுடன் செய்துகொண்ட அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா கடந்த ஆண்டு விலகியது. அத்துடன் ஈரானின் எண்ணெய் வருவாயை முடக்கும் வகையில் அந்நாட்டிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகள் மீது பொருளாதார தடை விதிக்கப்போவதாக மிரட்டல் விடுத்தது.

எனினும் 6 மாதங்களுக்குள் ஈரானிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை படிப்படியாக நிறுத்திக் கொள்ள வேண்டும் என்ற நிபந்தனையுடன் இந்தியா, சீனா உள்ளிட்ட 8 நாடுகளுக்கு மட்டும் விலக்கு அளித்தது. இந்த காலக்கெடுவானது வரும் மே 2ம் தேதியுடன் முடிவடைய உள்ளது. இதற்கிடையே இந்தியா உள்ளிட்ட 8 நாடுகளுக்கு அளிக்கப்பட்ட பொருளாதார தடை விலக்கு சலுகையை மேலும் நீடிக்க முடியாது என அதிபர் டிரம்ப் அறிவித்தார்.

அமெரிக்காவின் இந்த முடிவை ஏற்றுக்கொண்டால் இந்தியாவில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது. ஈரானிடம் இருந்து இறக்குமதி நிறுத்தப்படும் பட்சத்தில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை 3 சதவீதம் அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் தற்போது 65 டாலராக உள்ள ஒரு பேரல் கச்சா எண்ணையின் விலையானது, 74 டாலராக விலை உயரும் அபாயம் உள்ளது. இந்நிலையில் ஈரானில் இருந்து எண்ணெய் இறக்குமதிக்கு முழு தடை விதிக்கப்பட்ட நிலையில் இந்தியா உள்ளிட்ட நாடுகளின் பெட்ரோல் மற்றும் டீசல் தேவையை ‘ஒபெக்’ அமைப்பில் உள்ள அமெரிக்காவின் நட்பு நாடான சவுதி அரேபியா மற்றும் இஸ்ரேல் நாடுகள் ஈடுகட்டும் என்று அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Saudi Arabia ,Trump ,India , India, petrol shortages, Saudi Arabia, Chancellor Trump
× RELATED சவூதி அரேபிய சிறையில் இருந்து...