×

சித்திரை திருவிழாக்கள் துவங்கியதால் தென்னங்கீற்றுகள் விற்பனை அமோகம்

க.பரமத்தி: சித்திரை திருவிழாக்கள் சீசன் தொடங்கியுள்ளதால், தென்னங்கீற்று விலை உயர்ந்துள்ளது. பெரிய 100 கீற்று ரூ.900 வரை விற்பனையாகிறது. க.பரமத்தி ஒன்றியத்தில் புன்னம், அஞ்சூர், கோடந்தூர், அத்திப்பாளையம், குப்பம், கரூர் ஒன்றியத்தில் வேட்டமங்கலம், வேலாயுதம்பாளையம், தவிட்டுப்பாளையம், மூர்த்திபாளையம், திருக்காடுதுறை உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட கிராமங்களில் தென்னை வளர்ப்பு, தென்னங்கீற்று தயாரிப்பு வேலையில் ஏராளமான தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். வெயில் காலங்கள் மற்றும் திருவிழாக்கள் என்றாலே அதிகமாக தென்னங்கீற்றுகள் தேவைப்படுகின்றன. மேலும் ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் கிராமப்புறங்களில் அதிகளவில் திருவிழாக்கள் நடைபெறும்.

இதற்கு பந்தல் போட அதிகளவில் தென்னங்கீற்றுகள் தேவைப்படுகிறது. சின்னதாராபுரம், ஒத்தமாந்துரை, நொய்யல், சேமங்கி போன்ற பகுதிகளில் அதிகமான குடும்பங்களை சேர்ந்த தொழிலாளர்கள் தென்னங்கீற்று முடையும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நகர்புறங்களில் தற்போது சாமியானா பந்தல்கள் அமைக்கப்படும் சூழ்நிலை இருந்தாலும், தென்னங்கீற்றுகளை கொண்டு போடப்படும் பந்தலுக்கு என்றும் நல்ல வரவேற்பு அதிகளவில் உள்ளது. க.பரமத்தி மற்றும் கரூர் ஆகிய இரு ஒன்றிய பகுதிகளில் தயார் செய்யப்படும் தென்னங்கீற்றுகள் உள்ளுர், வெளியூர், வெளி மாவட்டங்களுக்கு மொத்தமாகவும், சில்லரையாகவும் விற்பனை செய்யப்படுகிறது.

தற்போது கடும் வெயில் மற்றும் கிராமப் புறங்களில் மாரியம்மன் கோயில் திருவிழா தொடங்கியும் ஒரு சில இடங்களில் நடைபெற்று வருகிறது. இதனால் வீடுகளில் முன்புறம் பந்தல் போடுவதற்காக கீற்று அதிகளவில் விற்பனையாகும் என்பதால் கீற்று முடைவோர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இது குறித்து தென்னங்கீற்று முடையும் தொழிலாளி ஒருவர் கூறுகையில், தற்போது கடும் வெயில் மற்றும் திருவிழாக்களால் தேவை அதிகரித்துள்ளது ஆனால் உறபத்தி குறைவு காரணம் கீற்றுகளை நன்கு ஊறவைத்தால் மட்டுமே முடைய முடியும் தற்போது போதிய மழை இல்லாததால் குடிநீருக்கே தட்டுப்பாடு உள்ள நிலையில் எங்களது தொழிலுக்கு தண்ணீர் காசு கொடுத்து வாங்கி கீத்து உற்பத்தி செய்ய வேண்டியுள்ளது இதனால் கீற்று விலை உயர்ந்துள்ளது. 50 எண்ணிக்கை கொண்ட ஒரு கட்டு கீற்று ரூ.350 முதல் ரூ.450 வரை தரத்திற்கு ஏற்ப விற்பனையாகி வருகிறது. சீசன் தொடங்கியுள்ளதால் 100 கீற்றுகள் கொண்ட பெரிய கீற்று ரூ.700 முதல் ரூ.900 வரையும், மற்ற நாட்களில் தரத்திற்கேற்ப விற்பனையாகிறது என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : ceremonies ,ceylon festivals , chithirai, festivals, tennankirrukal
× RELATED கட்டுப்பாடுகளை மீறும் திருமண...