×

களக்காடு தலையணையில் தொடர் வறட்சி, நீர்வரத்து குறைந்தது

களக்காடு: களக்காடு தலையணையில் தொடர் வறட்சியால் நீர்வரத்து குறைந்தது. வறட்சி நீங்க கோடை மழை கை கொடுக்குமா? என்று சுற்றுலா பயணிகள் எதிர்பார்ப்பில் உள்ளனர். களக்காடு புலிகள் காப்பகத்திற்குட்பட்ட மேற்குத்தொடர்ச்சி மலையில், தலையணை உள்ளது. இங்கு ஓடும் தண்ணீரில் குளுமை அதிகம் என்பதால், குளிக்க சுற்றுலா பயணிகள் தனி ஆர்வம் காட்டி வருகின்றனர். தினமும் ஏராளமானோர் தலையணைக்கு வந்து குளித்து செல்வர். இந்நிலையில் கடந்த டிசம்பர் மாதத்திற்கு பிறகு களக்காடு மேற்குத்தொடர்ச்சி மலையில் மழை பெய்யவில்லை. தற்போது கோடை வெயிலும் கொளுத்தி வருகிறது. சுட்டெரிக்கும் வெயிலால் ஆறு, கால்வாய், குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகள் வறண்டு வருகின்றன.

இதேபோல் மேற்குத் தொடர்ச்சி மலையிலும் கடும் வெயில் காணப்படுவதால் அருவி, நீரோடைகளில் தண்ணீர் வரத்து குறைந்து வருகிறது. களக்காடு தலையணையிலும் அனல் பறக்கும் வெயிலால் நீர்வரத்து வெகுவாக குறைந்துள்ளது. தடுப்பணையை தாண்டி நூலிழை போல் தண்ணீர் விழுகிறது. பள்ளங்களில் மட்டுமே சிறிதளவு தண்ணீர் தேங்கி உள்ளது. இந்த தண்ணீர் குளிப்பதற்கு ஏதுவாக இல்லை. மழை பெய்யாவிட்டால் இன்னும் இரு சில நாட்களில் தண்ணீர் முற்றிலும் வறண்டு விடும் நிலை காணப்படுகிறது.

தண்ணீர் இல்லாததால் சுற்றுலா பயணிகளின் வருகையும் வெகுவாக குறைந்துள்ளது. ஒரு சில சுற்றுலா பயணிகள் மட்டுமே வந்து செல்கின்றனர் இதனால் தலையணை நீர்வீழ்ச்சி, சிறுவர் பூங்கா, மூங்கில் பாலம், உணவகம், அருங்காட்சியகம் போன்ற பகுதிகள் பொதுமக்கள் கூட்டமின்றி வெறிச்சோடி களையிழந்து காணப்படுகிறது. இதனிடையே நெல்லை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த 4 நாட்களாக கோடை மழை பெய்து வருகிறது. ஆனால் களக்காடு பகுதியில் கோடை மழை பெய்யாமல் கண்ணாமூச்சி காட்டி வருகிறது. கோடை மழை புறக்கணித்து வருவதால் தலையணையில் வறட்சி நீடிக்கிறது. எனவே வறட்சி நீங்கி தண்ணீர் வரத்து ஏற்பட கோழை மழை பொழியுமா? என்று பொதுமக்களும், சுற்றுலா பயணிகளும் எதிர்நோக்கி உள்ளனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : drought ,Kalakkadu , Kalakkad, thalayanai, drought
× RELATED வறட்சியை நோக்கி நகரும் பெங்களூரு.. தண்ணீர் பற்றாக்குறையால் மக்கள் அவதி!!