×

திருவண்ணாமலை அருகே ஜல சமாதி அடைந்ததாக கூறப்பட்ட சிறுவன் கிணற்றில் விழுந்ததால் உயிரிழப்பு : உடற்கூறாய்வில் தகவல்!

திருவண்ணாதலை : திருவண்ணாமலை மாவட்டம் போளூரை அடுத்த படவேடு அருகே ஜல சமாதி அடைந்ததாக கூறப்பட்ட சிறுவன் கிணற்றில் விழுந்ததால் உயிரிழந்தது தெரியவந்துள்ளது. போளூர் அருகே அரிகிருஷ்ணன்-சுமதி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களது மகன் தனநாராயணன் பத்தாம் வகுப்பு படித்து வந்த நிலையில் வலிப்பு நோயால் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில் கடந்த மாதம் 24ம் தேதி வலிப்பு நோய் வந்து தனநாராயணன் விவசாய கிணற்றில் விழுந்துவிட்டார். தீயணைப்பு வீரர்கள் தனநாராயணனின் உடலை மீட்டனர். பின்னர், 108 அவசரகால ஊர்தி மருத்துவர்கள் தனநாராயணனின் உடலைப் பரிசோதித்துவிட்டு அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.

அப்போது அந்த பகுதிக்கு வந்த நாடி ஜோதிடர் பழனி, தனநாராயணனின் நாடியை பிடித்துப் பார்த்து உயிர்நாடி உள்ளது என கூறி ஜலசமாதி ஆகியுள்ளதாக தெரிவித்தார். இதையடுத்து அரிகிருஷ்ணன் தனது நிலத்திலேயே பள்ளம் தோண்டி தனநாராயணனின் உடலை சம்மணமிட்டு அமர்ந்தவாறு புதைத்துவிட்டார். இதுகுறித்து வாட்ஸ்ஆப் உள்ளிட்ட சமூக வளைத்தளங்களில் தகவல் பரவியதால் படவேடு கிராம நிர்வாக அலுவலர் மகாலிங்கம் சந்தவாசல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனை தொடர்ந்து திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி உத்தரவின் பேரில் தனநாராயணனின் உடல் நேற்று தோண்டி எடுக்கப்பட்டு அதே இடத்தில் உடற்கூறு ஆய்வு செய்யப்பட்டது.

இந்நிலையில் உடற்கூறு முடிவில் தனநாராயணன் கிணற்றில் விழுந்ததில்தான் மரணமடைந்தது தெரிய வந்தது. இதையடுத்து மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி, காவல் கண்காணிப்பாளர் சிபி.சக்கரவர்த்தி ஆகியோர் அரிகிருஷ்ணன், சுமதி தம்பதியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து பேசிய ஆட்சியர் கந்தசாமி, மருத்துவப் பரிசோதனையில் கிணற்றில் விழுந்த சிறுவன் மூச்சுத் திணறித்தான் இறந்ததாக தெரிய வந்துள்ளது. எனவே தவறான தகவலை நம்ப வேண்டாம் என கூறியுள்ளார். மேலும் சமூக வளைத்தளங்களில் தவறான தகவல் பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் எச்சரித்துள்ளார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : well ,Jala Samadhi ,Thiruvannamalai ,death , Thiruvannamalai, Jala Samadhi, boy and anatomy
× RELATED நடப்போம் நலம் பெறுவோம்’ திட்டம் மூலம்...