×

இலங்கை தொடர் குண்டுவெடிப்பில் ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு தொடர்பு?....... விசாரணையை தொடங்கியது இண்டர்போல்

கொழும்பு: இலங்கை தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்களில் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ள நிலையில், சர்வதேச போலீஸ் அமைப்பான இண்டர்போல் குழு கொழும்பு விரைந்துள்ளது. இலங்கையில் ஞாயிறன்று 3 தேவாலயங்கள், 4 நட்சத்திர விடுதிகள், ஒரு வீடு என 8 இடங்களில் நடத்தப்பட்ட குண்டு வெடிப்பு தாக்குதல்களில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 295 ஆக உயர்ந்துள்ளது. 500க்கும் மேற்பட்டோர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

6 இடங்களில் தற்கொலைப்படை தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. குண்டுவெடிப்பு தொடர்பாக 55 பேர் கைது செய்யப்பட்டு 26 பேரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. தொடர் குண்டுவெடிப்பால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கைக்கு, குழு ஒன்றை சர்வதேச போலீஸ் அமைப்பான இண்டர்போல் அனுப்புகிறது. சம்பவ இடங்களை ஆராய்தல், வெடிகுண்டுகளை ஆய்வு செய்தல், தீவிரவாத தடுப்பு, பேரிடரில் பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் காண்பது ஆகியவற்றில் சிறப்புத் திறன் பெற்றவர்கள் இந்தக் குழுவில் இடம் பெற்றிருப்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, உளவுத்துறை தகவல்கள் அதிபர் மைத்ரிபால சிரிசேனவிற்கு அனுப்பட்டும், உரிய நடவடிக்கை எடுக்கப்படாததே தாக்குதல் நிகழக் காரணம் என பிரதமர் ரணில் விக்ரமசிங்கே குற்றம் சாட்டியிருக்கிறார். இலங்கையில் தொடர்ந்து பதற்றம் நீடிப்பதால், அதிபர் சிறிசேனா அவசர நிலையைப் பிரகடனம் செய்துள்ளார். குண்டு வெடிப்பு குறித்து விசாரணை நடத்த 3 பேர் கொண்ட குழுவை அமைத்திருப்பதுடன், இரண்டு வாரங்களில் அறிக்கை அளிக்க உத்தரவிட்டுள்ளார். கொழும்பு நகரில் இரவு 8 மணி முதல் அதிகாலை 4 மணி வரை கொழும்பு நகரில் ஊரடங்கு அமலில் இருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, கொழும்பு நகரின் பிரதான பேருந்து நிலையத்தில், ஒரு பேருந்திலிருந்து 87 டெட்டனேட்டர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதேபோல, மன்னார்ஓலை தொடுவாய் என்ற பகுதியில் புதைத்து வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு கண்டறியப்பட்டு செயல் இழக்கச் செய்யப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. தாக்குதலில் தொடர்புடையவர்கள் கடல் வழியாக தப்பிச் செல்வதைத் தடுக்கும் வகையில், இலங்கையை ஒட்டியுள்ள கடல் எல்லையில், இந்திய கடலோரக் காவல்படை உஷார்நிலையில் வைக்கப்பட்டு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இதனிடையே இலங்கை குண்டு வெடிப்பு நிகழ்வுகளில் சர்வதேச பயங்கரவாத இயக்கமான ஐஎஸ் அமைப்புக்கு தொடர்பு இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. ஐஎஸ் இயக்கத்தின் ஆதரவு தொலைக்காட்சி ஒன்றில், இலங்கையில் தற்கொலைத் தாக்குதல் நடத்தியவர்கள் என மூவரின் படத்தை வெளியிட்டுள்ளது. அபுல் பாரா, அபுல் முக்தார் மற்றும் அபுல் உபைதா ஆகியோர் இந்தத் தாக்குதலை நடத்தியவர்கள் என அந்தத் தொலைக்காட்சி தெரிவித்துள்ளது. இலங்கையில் செயல்படும் நேஷனல் தவ்ஹீத் ஜமாத் என்ற அமைப்பின் பொறுப்பாளரான ஸ்ற்ரான் ஹாஸின் என்பவரே அபுல் உபைதா என்று அந்தத் தொலைக்காட்சியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இவை உறுதி செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : ISSE ,terrorists ,Sri Lanka , Interpol, IS Terrorists, Sri Lanka, serial blasts,
× RELATED நாகை – இலங்கை இடையே மே 19-ல் கப்பல் போக்குவரத்து தொடக்கம்