×

தமிழகத்தில் முதன் முறையாக வாயு மூலம் மயக்க மருந்து செலுத்தி செல்லப்பிராணிகளுக்கு ‘ஆபரேஷன்’: சேலம் கால்நடை மருத்துவமனையில் சாதனை

சேலம்: தமிழகத்தில் உள்ள அரசு கால்நடை மருத்துவமனைகளில் ஆடு, மாடு, நாய், பூனை உள்ளிட்ட பிராணிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இப்படி சிகிச்சைக்கு வரும் செல்லப்பிராணிகளுக்கு அறுவை  சிகிச்சை செய்ய வேண்டும் என்றால், ஊசி மூலம் மயக்க மருந்து செலுத்தி, அறுவை சிகிச்சையை மருத்துவர்கள் நடத்தி வருகின்றனர். இதில், நவீன முறையாக மயக்க மருந்தை வாயு மூலம் செலுத்தும் கருவியை மாநிலம்  முழுவதும் உள்ள முக்கிய அரசு கால்நடை மருத்துவமனைகளில் பொருத்தும் பணியை அரசு மேற்கொண்டுள்ளது. இதன்படி சேலம் கலெக்டர் அலுவலகம் எதிரே உள்ள அரசு கால்நடை பன்முக மருத்துவமனையில், செல்லப்பிரானிகளுக்கு அறுவை சிகிச்சை செய்யும் கூடத்தில், புதிதாக  ‘சேவோஃப்ளூரேன்’ வாயு மயக்க மருந்து செலுத்தும்  கருவியையும், நிழல் விழாத மின்விளக்கும் பொருத்தப்பட்டது. அந்த நவீன கருவி மூலம் மயக்க மருந்தை செலுத்தி செல்லப்பிராணிகளுக்கு அறுவை சிகிச்சை செய்யும் பணி நேற்று தொடங்கியது.

2 நாய்களுக்கு டாக்டர்கள் கருத்தடை அறுவை சிகிச்சை செய்தனர். முன்னதாக அந்த இரு நாய்களுக்கும் வாயு மூலம் மயக்க மருந்தை செலுத்தினர். அறுவை சிகிச்சை முடிந்த 15 நிமிடத்தில் மயக்கம் தெளிந்து, நாய்கள் நல்ல  நிலையில் இருந்தது. இதுபற்றி மருத்துவர்கள் கூறுகையில், ‘‘வழக்கமாக ஊசி மூலம் மயக்க மருந்து செலுத்தி அறுவை சிகிச்சை செய்யும்போது, மயக்கம் தெளிய ஒரு மணி நேரமாகும். மயக்க மருந்தை அதிக அளவு செலுத்தி விடவும் கூடாது.  தற்போது அந்த பிரச்னை கிடையாது. வாயு மூலம் செல்லப்பிராணிகளுக்கு மயக்க மருந்து செலுத்துவதால், எவ்வித பிரச்னையும் ஏற்படாது. அறுவை சிகிச்சை முடிந்த 15 நிமிடத்தில் சாதாரண நிலைக்கு செல்லப்பிராணிகள் வந்து  விடும். தமிழகத்தில் முதன்முறையாக சேலத்தில் இக்கருவியை பயன்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளோம். இதை மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்’’ என்றனர்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : time , First time , Tamilnadu,gas, Salem Veterinary ,Hospital
× RELATED வரலாற்றில் முதன்முறையாக ரூ.50,000ஐ தொட்ட...