×

உறுதி கொடுத்தபடி பணத்தை இன்னும் தராததால் 8 தொகுதிகளில் போட்டியிட்ட அமமுக வேட்பாளர்கள் அதிருப்தி

சென்னை: தமிழகத்தில் 38 நாடாளுமன்றம் மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் கடந்த 18ம் தேதி ஒரேகட்டமாக நடந்து முடிந்தது. முன்னதாக, 18 சட்டமன்ற தொகுதிகளில் அமமுக சார்பில்  வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டனர். அதிமுகவிற்கு இணையாக தேர்தலில் செலவு செய்ய வேட்பாளர்களுக்கு அமமுக தலைமை உத்தரவிட்டிருந்தது. ஆனால், தங்களிடம் செலவு செய்ய போதிய பணம் இல்லை, தலைமை பணம்  தந்தால்தான் அதிமுகவிற்கு இணையாக தேர்தலில் செலவு செய்ய முடியும் எனவும் கூறிவிட்டனர். இதுகுறித்து சிறையில் உள்ள சசிகலாவிடம் ஆலோசனை நடத்திய தினகரன், அவரின் உத்தரவின் பேரில் குடும்பத்தில் நெருங்கிய நபரின் மூலம் வேட்பாளர்களுக்கு செலவு செய்ய பாதி பணத்தை கொடுத்தார். இதேபோல்,  மீதத்தை நீங்களே செலவு செய்துகொள்ளுங்கள், தேர்தல் முடிந்ததும் கட்சி சார்பில் கொடுக்கப்படும் எனவும் வேட்பாளர்களுக்கு உறுதி அளித்ததாக தெரிகிறது. தலைமை தெரிவித்தபடி, நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட வேட்பாளர்களுக்கு ரூ.20 கோடியும், சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களுக்கு ரூ.8 கோடியும் ஒதுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதை  நம்பி வேட்பாளர்களும் தங்களின் கைகளில் இருந்த பணத்தையும், கடனுக்கு வாங்கியும் செலவு செய்துள்ளனர்.

இந்நிலையில், கடந்த 18ம் தேதி தேர்தல் முடிந்த நிலையில் இதுவரையில் தலைமை உத்தரவாதம் அளித்தபடி வேட்பாளர்களுக்கு பணத்தை திரும்ப கொடுக்காததால் அவர்கள் கடும் அதிருப்தியை அடைந்துள்ளதாக தகவல்  வெளியாகியுள்ளது.  இதுகுறித்து, அமமுக வட்டாரங்கள் கூறியதாவது:வேட்பாளர்களின் கோரிக்கையை ஏற்று இடைத்தேர்தலில் செலவு செய்ய ரூ.8 கோடி ஒதுக்கப்படும் என தலைமை உத்தரவாதம் அளித்தது. அதன்படி, வேட்பாளர்களும் தலைமை பாதி பணத்தை கொடுக்க, மீதி பணத்தை  தாங்களே செலவு செய்தனர். ஏற்கனவே, தலைமை கணித்தபடி வாக்கு எண்ணிக்கை அதிகம் பெறக்கூடிய குறிப்பிட்ட 10 தொகுதிகளில் போட்டியிட்ட வேட்பாளர்களுக்கு மட்டுமே ரூ.8 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 8  தொகுதி வேட்பாளர்களுக்கு எந்த பணமும் ஒதுக்கப்படவில்லை. இதனால், அந்த 8 தொகுதிகளில் போட்டியிட்ட வேட்பாளர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். இதுகுறித்து தலைமையிடம் கேட்டு எந்த பதிலும் இல்லாததால்  என்ன செய்வதென்று தெரியாமல் உள்ளனர். இவ்வாறு கூறினர்.   




பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : DMK ,constituencies , money ,paid, Contested,constituencies, DMK candidates
× RELATED தமிழகம், புதுச்சேரி 40 தொகுதிகளிலும்...