×

இந்தூரில் பாஜ தலைவர்களுக்கு பிம்பிளிக்கு பிளாப்பி

மத்தியப்பிரதேச மாநிலம் இந்தூர் மக்களவை தொகுதிக்கு வேட்பாளரை அறிவிப்பதில் பா.ஜ., திணறி வந்தது. சுமித்ரா மகாஜனும், விஜய் வர்கியாவும்  தங்கள் ஆதரவாளர்களுக்கே சீட்டு வழங்க வேண்டும் என தலைமையை  வற்புறுத்தி வந்த நிலையில் இருதரப்பையும் சேராத சங்கர் லால்வாணியை இந்தூர் வேட்பாளராக நேற்று பாஜ தலைமை அறிவித்தது.மத்தியப் பிரதேச மாநிலத்தில் 29 மக்களவை தொகுதி உள்ளன. கடந்த மார்ச் 23ம் தேதி 15 தொகுதிகளுக்கும், மார்ச் 29 ஏப்ரல் 6, ஏப்ரல் 14 ஆகிய தேதிகளில் தலா 3 தொகுதிகளுக்கும், ஏப்ரல் 17 ம் தேதி 4 தொகுதிகளுக்கும்  பா.ஜ., வேட்பாளர்களை அறிவித்திருந்தது. இந்தூர் தொகுதிக்கான வேட்பாளரை அறிவிப்பதில் இழுபறி தொடர்ந்து நீடித்து வந்தது. இந்தூர் மக்களவை தொகுதியில் 8 முறை தொடர்ந்து வெற்றி பெற்று எம்.பியாக இருந்த மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜனுக்கு வயதை  காரணம் காட்டி வாய்ப்பு மறுக்கப்பட்டது. சுமித்ராவின் எதிர்கோஷ்டி தலைவரான பாஜ தேசிய செயலாளர் விஜய் வர்கியாவும் மேற்கு வங்க மாநில தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டதால் அவருக்கும் வாய்ப்பு இல்லாமல் போனது.

இதையடுத்து சுமித்ராவும், விஜய் வர்கியாவும் தங்கள் ஆதரவாளர்களுக்கே வாய்ப்பு வழங்கவேண்டும் என தலைமைக்கு நெருக்கடி கொடுத்து வந்தனர். சுமித்ரா தரப்பில் அவரது மகன் மிலிந்த், இந்தூர் மேயர் மாலினி கவுர், சமூக ஆர்வலர் ஜெயந்த் பிஷே ஆகியோர் பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டன. அதேபோல விஜய் வர்கியா தரப்பில்  எம்.எல்.ஏக்கள் ரமேஷ் மண்டோலா, உஷா தாகூர் பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டன. இந்தூரில் அதிகாரத்தை நிறுவுவது தாயா (சுமித்ரா அக்கா), பாயா (விஜய்வர்க்கியா அண்ணன்) என  கடும் போட்டி நிலவியதால் இந்தூர் தொகுதிக்கு வேட்பாளர் அறிவிப்பதில் கடும் சிக்கல் ஏற்பட்டது. இந்நிலையில் நேற்று இந்தூர் தொகுதிக்கு சங்கர் லால்வாணியை பாஜ தலைமை அறிவித்தது. முன்னாள் இந்தூர் வளர்ச்சி வாரிய தலைவரான சங்கர் லால்வாணி  மக்களவை தேர்தலில் போட்டியிடுவது இதுவே முதல்முறை. பெரிய அறிமுகமில்லாதவருக்கு வாய்ப்பு வழங்கியதால் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் பங்கஜ் சங்வியின் வெற்றி எளிதாகிவிட்டது என காங்கிரஸ் கட்சியினர் மகிழ்ச்சியில் உள்ளனர்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : BJP ,leaders ,Indore , BJP ,leaders , Indore
× RELATED காங்.கில் இருந்து விலகிய 3 அரசியல் பிரமுகர்களுக்கு ஒய் பிரிவு பாதுகாப்பு