×

20 நாட்களுக்கு மேலாக சப்ளை இல்லை நாகர்கோவிலில் நள்ளிரவில் குடிநீர் வினியோகம்: பொதுமக்கள் கடும் அவதி

நாகர்கோவில்: நாகர்கோவில் மாநகர பகுதிகளில் நள்ளிரவில் குடிநீர் வினியோகம் இருப்பதால் மக்கள் கடும் அவதி அடைந்துள்ளனர். 20 நாட்களுக்கு பின், நள்ளிரவில் வந்த தண்ணீரை பிடிக்க முடியாமல் பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்தனர். நாகர்கோவில் மாநகர மக்களுக்கு முக்கடல் அணையில் இருந்து தண்ணீர் வினியோகம் செய்யப்படுகிறது. கோடை வெயிலின் உக்கிரம் காரணமாக, தற்போது குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. 10 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வினியோகம் இருந்த நிலை மாறி, இப்போது 20 நாட்களுக்கு மேலாகியும் பல இடங்களில் குடிநீர் சப்ளை இல்லை. முக்கடல் அணையில் போதிய தண்ணீர் இல்லாததால், பெருஞ்சாணி அணையில் இருந்து தண்ணீர் வினியோகம் நடக்கிறது. இருப்பினும் தட்டுப்பாட்டை சமாளிக்க முடிய வில்லை. மாநகர மக்கள் குடிநீருக்காக அல்லல்படும் நிலை ஏற்பட்டு உள்ளது. நிலைமை இவ்வாறு நீடித்தால் மாநகரில் குடிநீருக்கு கடும் பஞ்சம் உருவாகும் அபாயம் ஏற்பட்டு இருக்கிறது.

இந்த நிலையில் மாநகர முக்கிய பகுதிகளில் 20, 25 நாட்களுக்கு பின் குடிநீர் வினியோகம் நள்ளிரவில் வந்துள்ளது. கிருஷ்ணன்கோவில், அருகுவிளை, காமராஜர்புரம், வாத்தியார்விளை, வடசேரி  பகுதிகளில் 25 நாட்களுக்கு பின் நேற்று முன் தினம் நள்ளிரவில் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு உள்ளது. இரவு 11 மணியில் இருந்து நள்ளிரவு 1 மணி வரை மட்டுமே தண்ணீர் வினியோகம் செய்து விட்டு நிறுத்தி விட்டனர். மறுநாள் காலையில் குடிநீர் குழாய்களை திறந்தால் காற்று மட்டுமே வந்துள்ளது. நள்ளிரவில் பொதுமக்கள் உறங்கும் நேரத்தில் குடிநீர் வினியோகம் செய்து விட்டு, நிறுத்தி உள்ளனர். கணக்கு காட்டுவதற்காக குடிநீர்  சப்ளை நடக்கிறது. மக்களுக்கு வினியோகம் செய்யும் வகையில் மாலை நேரத்தில் குடிநீர் வினியோகம் இருக்க வில்லை. அவ்வாறு  மாலை நேரத்தில் குடிநீர் வினியோகம் இருந்தால் அனைத்து பொதுமக்களும் பயன் அடைவார்கள்.

எனவே தண்ணீர் தேவை அதிகமாக இருக்கும். அதே சமயம் நள்ளிரவில் குடிநீர் வினியோகம் செய்தால் மக்கள் அதிக பயன்பாட்டுக்கு தண்ணீர் பிடிக்க  மாட்டார்கள் என எண்ணி அதிகாரிகளின் சூழ்ச்சி காரணமாக நள்ளிரவில் தண்ணீர் வினியோகம் இருக்கிறது. தற்போது இந்த பிரச்சினை காரணமாக மாநகரின் பல இடங்களில் மக்கள் கொதிப்படைந்துள்ளனர். அவர்கள் மாநகராட்சி அலுவலகம் முன் குடத்துடன் திரண்டு போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர். இயற்கை வளங்கள் நிறைந்த குமரி மாவட்டத்தில் தற்போது கடுமையாக குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு இருப்பது மக்களை அச்சம் அடைய செய்துள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Nagarcoil , Nagarcoil, drinking water supply, civic people
× RELATED நாகர்கோவில் - நெல்லை பயணம் கண்டக்டர்...