×

குறைந்தபட்ச வருவாய் உறுதித் திட்டம் புதிய வேலை வாய்ப்பை பெருக்கும்: முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் நம்பிக்கை

டெல்லி: ‘ஒவ்வொரு இந்திய மக்களின் கவுரவம் மற்றும் மரியாதையை நிலைநாட்டும் வகையில், குறைந்தபட்ச வருவாய் உறுதித் திட்டம் அமைந்துள்ளது’ என, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஒட்டுமொத்த உள்ளூர் உற்பத்தியில் குறைந்தபட்ச வருவாய் உறுதித் திட்டத்துக்கு 1.2 சதவீதம் முதல் 1.5 சதவீதம் வரை செலவாகும். இந்த திட்டத்தை செயல்படுத்த புதிய வரிகள் போட வேண்டிய அவசியம் இல்லை. இத்திட்டத்தால், ஒவ்வொரு இந்திய மக்களுக்கும் கவுரவமும் மரியாதையும் ஏற்படும். ஏழைகளுக்கு பொருளாதார சுதந்திரத்தை அளிக்கும். பழுதாகியிருக்கும் பொருளாதார இயந்திரத்தை, மீண்டும் இயக்க குறைந்தபட்ச வருவாய் உறுதித் திட்டம் பயன்படும். பொருளாதார நடவடிக்கை அதிகரிப்பதால் வேலை வாய்ப்பும் பெருகும்.

தற்போது தனியார் முதலீடு மற்றும் தொழிற்சாலை உற்பத்தி குறைவாக உள்ளது. குறைந்தபட்ச வருவாய் உறுதித் திட்டத்தை செயல்படுத்தியபின், பொருளாதார நிலை சீர்படுவதோடு, புதிய வேலை வாய்ப்பும் பெருகும். பொருளாதார நிபுணர்களுடன் கலந்தாலோசித்த பின்னரே, இந்த திட்டம் சாத்தியம் என்று அறிவிக்கப்பட்டது. இந்த திட்டத்தால் இந்தியாவை வறுமை இல்லாத நாடு என்ற நிலைக்கு உயர்த்த முடியும் என்று முழுமையாக நம்புகின்றேன். இந்தியா சுதந்திரம் அடைந்தபோது, 70% ஏழைகள் இருந்தனர். கடந்த 70 ஆண்டுகளாக அரசு நிறைவேற்றிய பல்வேறு திட்டங்களால், ஏழைகளின் விகிதம் 20 சதவீதமாக குறைந்துள்ளது. மீதமிருக்கும் வறுமையையும் விரட்டும் நேரம் தற்போது வந்துள்ளது. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Manmohan Singh , Minimum income stability plan, job offer, former prime minister Manmohan Singh, believes
× RELATED மக்கள் நல திட்டங்களை...