×

மலைக்கு புறப்பட்டார் கள்ளழகர் சித்திரை திருவிழாவில் விடிய விடிய பூப்பல்லக்கு: ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

மதுரை: சித்திரை திருவிழாவையொட்டி மதுரை வைகை ஆற்றில் இறங்கிய கள்ளழகர்  பூப்பல்லக்கில் இன்று அழகர்கோயில் மலைக்கு புறப்பட்டார். வழிநெடுகிலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு அவரை வழியனுப்பி வைத்தனர். சித்திரை திருவிழாவை முன்னிட்டு அழகர்கோயில் மலையில் இருந்து கடந்த 17ம் தேதி கள்ளழகர் மதுரை புறப்பட்டார். 18ம் தேதி மூன்றுமாவடி முதல் தல்லாகுளம் வரை பக்தர்கள் எதிர்சேவை செய்து கள்ளழகரை வரவேற்றனர். தல்லாகுளம் பெருமாள் கோயிலில் கள்ளழகர், அழகராக வேடம் பூண்டார். ஆண்டாள் சூடி கொடுத்த மாலையை அணிந்து தங்கக் குதிரை வாகனத்தில் எழுந்தருளி ஏப்.19ம் தேதி அழகர் வைகை ஆற்றில் இறங்கினார்.

பின் சேஷ வாகனத்தில் வண்டியூரில் இருந்து புறப்பட்ட அழகர், வைகை ஆற்றிலுள்ள தேனூர் மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு அழகர், கருட வாகனத்தில் தோன்றி மண்டூக (தவளை) உருவில் தவம் இருந்த சுதபஸ் என்ற முனிவருக்கு சாப விமோசனம் அளித்தார். பின் ராமராயர் மண்டபத்தில் அழகரின் தசாவதாரம் நடந்தது.  மண்டபத்தில் இருந்து அனந்தராயர் பல்லக்கில் ராஜாங்க திருக்கோலத்துடன் புறப்பட்ட அழகர், நேற்று இரவு 11 மணிக்கு ராமநாதபுரம் மன்னர் சேதுபதி மண்டபத்திற்கு சென்றார். இதுவரை அழகராக காட்சி தந்தவர் அதிகாலை 2.30 மணிக்கு பூப்பல்லக்கில் மீண்டும் கள்ளழகர் வேடம் பூண்டு விடிய, விடிய பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

அழகரை தரிசித்த விவசாயிகள், தங்கள் வயல்களில் விளைந்த நெல் மற்றும் தானியங்களை தல்லாகுளம் பெருமாள் கோயிலில் காணிக்கையாக செலுத்தினர். பின்பு தல்லாகுளத்தில் இருந்து ஒவ்வொரு மண்டகப்படியாக சென்று மலையை நோக்கி புறப்பட்டார்.
காலை 8 மணிக்கு அம்பலகாரர் மண்டபத்தில் தங்கி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின் 10 மணிக்கு அங்கிருந்து புறப்பட்ட கள்ளழகர் புதூர், மூன்றுமாவடி வழியாக இன்று இரவு அப்பன்திருப்பதிக்கு செல்கிறார். ஆயிரக்கணக்கான பக்தர்கள் அவரை தரிசனம் செய்து, மலைக்கு வழியனுப்புகின்றனர். வழியெங்கிலும் உள்ள மண்டகப்படிகளில் எழுந்தருளிய பின், நாளை காலை 10.30 மணிக்கு மேளதாளம் முழங்க மலையை சென்றடைகிறார். 7 நாட்களுக்கு பிறகு கள்ளழகர் மலைக்கு சென்றடைந்ததும் சித்திரை திருவிழா நிறைவடைகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : pilgrims , Kallalagar, Chithra Festival, Bhupalaku, pilgrims darshan
× RELATED நாகூர் தர்காவில் 467வது கந்தூரி விழா கொடியேற்றத்துடன் தொடக்கம்