×

இலங்கையில் குண்டுவெடிப்பு எதிரொலி : வேளாங்கண்ணி தேவாலயத்துக்கு 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு!

நாகை : இலங்கையில் தொடர் குண்டுவெடிப்பு நடந்ததை தொடர்ந்து வேளாங்கண்ணியில் உள்ள தேவாலயத்துக்கு 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இலங்கையில் நேற்று காலையில் தொடர்ச்சியாக 8 இடங்களில் குண்டுகள் வெடித்தது. இந்த தொடர் குண்டு வெடிப்புகள் உலகம் முழுவதும் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியிருந்தது. இந்த தொடர் குண்டு வெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 290ஆக அதிகரித்துள்ளது. அதில் 6 பேர் இந்தியர்கள் என்று தெரியவந்துள்ளது. இந்நிலையில் உலக புகழ்பெற்ற வேளாங்கண்ணி பேராலயம், தரங்கம்பாடி டேனிஷ் கோட்டை உள்ளிட்ட இடங்களில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

மேலும் தேவாலயத்திற்கு வருகை தரும் பக்தர்கள் அனைவரும் பலத்த சோதனைக்குப் பிறகே உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர். மேலும் கடலோர எல்லையில் பாதுகாப்பை பலப்படுத்தும் நடவடிக்கையில் இலங்கை - இந்திய கடலோர காவல்படையினர் ஈடுபட்டுள்ளனர். அந்த வகையில் ராமநாதபுரம் கடலோர பகுதிகளில் இந்திய கடலோர காவல்படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். சர்வதேச கடல் எல்லை பகுதியில் கூட்டு கண்காணிப்பிலும் குறிப்பாக தனுஷ்கோடி, பாம்பன் பகுதிகளில் துப்பாக்கி ஏந்திய காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். தனுஷ்கோடியில் வாகன போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதேபோல புதுச்சேரியில் நகரப்பகுதியில் உள்ள பல்வேறு கிறிஸ்துவ தேவாலயங்களில் சோதனை நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Echo ,Sri Lanka ,church ,Velankanni , Sri Lanka,Bombing,Velankanni Church,Police protection
× RELATED இலங்கைக்கு கடத்தப்பட்ட பீடி இலைகள் படகுடன் பறிமுதல்