×

கோடை வெயிலின் தாக்கத்தால் போதிய தீவனம் இன்றி அல்லாடும் கால்நடைகள்

ராமநாதபுரம்: கோடை வெயில் நாளுக்கு நாள் அதிகமாகி வருகின்றது. வெப்பம் தாங்காமல் மக்கள் நடமாட்டத்தை குறைத்து வீட்டிலேயே முடங்கியுள்ளனர். கிராமங்களில் விவசாயிகள் விளைச்சல் இல்லாத நிலையில் வளர்க்கும் கால்நடைகளும் போதிய தீவனம் கிடைக்காமல் சிரமப்படுகின்றன. ராமநாதபுரம் மாவட்டத்தில் 95 முதல் 100 டிகிரி அளவுக்கு வெயில் கொளுத்த தொடங்கியுள்ளது. வரும் நாட்களில் இன்னும் அதிகமாகலாம் என வானிலை ஆய்வு மையம் தெரிவிக்கிறது. காலை 7 மணி முதலே சுட்டெரிக்கும் வெயில் மாலை 6 மணி வரை நீடிக்கிறது. லேசான காற்று அடிக்கும் பகுதியில் கூட அனல் காற்று வீசுகிறது.

தென் மாவட்டங்களில் மழை பெய்யாத நிலையில் ஊரணிகள், குளங்கள், குட்டைகள், கண்மாய்கள் வறண்ட நிலையில் உள்ளது. நிலத்தடி நீரும் அதள பாதாளத்துக்குச் சென்று விட்டது. நஞ்சை, மானாவாரி விவசாயிகள், காய்கறி பயிரிடும் விவசாயிகளும் விளைச்சல் இல்லாமல் கஷ்டப்படுகின்றனர். இதனால் தங்களது கால்நடைகளை வளர்ப்பதற்கு தேவையான தீவனம் கிடைக்காமல் மிகுந்த கவலையில் உள்ளனர். பட்டியில் அடைத்து வைக்கப்பட்டுள்ள மாடுகளை குளம் கண்மாய்களில் மேய விட்டாலும் போதுமான புல் செடி, கொடிகள், பசுந்தழைகள் கிடைப்பதில்லை. தண்ணீர் பற்றாக்குறையால் வறண்ட தரையில் குறைவாக உள்ள காய்ந்த புல்களை மேய்வதற்கு கால்நடைகள் மிகுந்த சிரமப்படுகின்றன. பசு மாடுகளுக்கு பசுந்தீவனம் பற்றாக்குறையால் பால் உற்பத்தி வெகுவாக குறைந்து விட்டது.

வெப்பத்தால் மாடுகள் விரைவில் சோர்வடைந்து விடுகின்றன. நீண்டநேரம் அவற்றால் மேய்ச்சலில் நிற்க முடியவில்லை. வெப்பத் தாக்குதல் காரணமாக மாடுகள் நாக்கிலிருந்து நீர் சொட்டுகிறது. கண்கள் சொருகி கண்ணீர் வெளியாகிறது. நீர்ச்சத்து குறைபாடு ஏற்பட்டு உடல் மெலிந்து வருகிறது. உணவு உட்கொள்ளவே தெம்பில்லாததால் சரிவர உணவுகளையும் உட்கொள்வதில்லை. வெயிலின் தாக்கத்தால் ஆடுகளுக்கு வாய் அம்மை நோயால் பாதிக்கப்பட்டு வருகின்றது. அதிகாலையிலேயே மேய்ச்சலுக்கு அனுப்பினாலும் காலை 9 மணிக்கு மேல் நிற்க முடியாமல் ஆடு, மாடுகள் மீண்டும் தொழுவத்திற்கு வந்துவிடுகின்றன.

சோர்வாக இருக்கும் மாடுகள் படுத்து விடுகிறது. வெயில் காலத்தில் பசுந்தீவனம் கிடைக்காததால் பச்சையாய் இருக்கும் எல்லாவற்றையும் கால்நடைக்கு உணவாகக் கொடுக்கும் நிலை ஏற்படுகிறது. நகர்புறங்களில் மாடு வளர்பவர்கள் தெருவில் அவிழ்த்து விடுவதால் குப்பைகளில் வீசி ஏறியும் உணவுகளை கிளறி உண்ணுகின்றன. இந்த உணவுகள் துணி, பேப்பர்கள், பிளாஸ்டிக் பைகளில் கட்டி போடுவதால் அதையும் சேர்த்தே உண்ணுவதால் மாடுகளின் குடலில் சிக்கி உயிரிழக்கும் நிலை ஏற்படுகிறது. ஆடு,மாடு வளர்ப்பவர்கள் கோடை காலம் முடியும் வரை ஹோட்டல்களில் வீணாகும் உணவுகள், காய்கறி தோல்கள் கழிவுகளை வாங்கி கால்நடைகளுக்கு கொடுக்கலாம்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Allah , Summer, fodder, livestock
× RELATED சகோதரத்துவத்தை போற்றும் ஈகை திருநாள்