×

ஓசூர், நீலகிரியில் யானைகள் அட்டகாசம்: ஒற்றை யானை தாக்கியதில் மூதாட்டி பலி

மஞ்சூர்: நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அருகே உள்ள கெத்தை பகுதியில் 10க்கும் மேற்பட்ட  காட்டு யானைகள் முகாமிட்டுள்ளன. இந்த யானைகள் விவசாய தோட்டங்களில்  புகுந்து பயிர்களை நாசம் செய்வதும் மஞ்சூர் கெத்தை சாலையில் ஆங்காங்கே  கூட்டமாக நின்று அவ்வழியாக சென்று வரும் வாகனங்களை வழி மறிப்பதுமாக உள்ளன. இதில்  கூட்டத்தில் இருந்து பிரிந்த ஒற்றை யானை கடந்த சில தினங்களாக கெத்தை,  எல்ஜிபி பிரிவு, மந்து பகுதிகளில் நடமாடி வருவதுடன் அப்பகுதியில் உள்ள  மலைகாய்கறி மற்றும் மேரக்காய் தோட்டங்களில் புகுந்து காய் மற்றும் செடிகளை  சூறையாடி வருகிறது.

கோடை சீசன்  துவங்கியதை தொடர்ந்து சுற்றுலா பயணிகள் ஏராளமானோர்  கோவை-மஞ்சூர் வழியாக ஊட்டிக்கு சென்று வருகின்றனர். நேற்று முன்தினம் மாலை  பழைய வனச்சரக அலுவலகம் அருகே கோவையில் இருந்து 2 வாகனங்களில் சுற்றுலா  பயணிகள் ஊட்டிக்கு சென்று கொண்டிருந்தபோது, பெரும்பள்ளம் அருகே நடுரோட்டில்  ஒற்றை யானை வழியை மறித்தபடி நின்றிருந்தது. இதை கண்ட பயணிகள்  தங்களது வாகனங்களை சற்று தொலைவாகவே ஓரங்கட்டி நிறுத்தியுள்ளனர். நீண்ட நேரம் கழித்து அவ்வழியாக சென்ற அரசு பஸ்சை பின்  தொடர்ந்து சுற்றுலா பயணிகள் ஊட்டிக்கு சென்றனர்.

மாந்தோப்பில் யானைகள்: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே சானமாவு வனப்பகுதியில் இருந்து நேற்று அதிகாலை 7 யானைகள் அத்திமுகம் கிராம பகுதிக்கு வந்தன. அங்கு பயிரிட்டிருந்த முட்டைகோஸ், பீன்ஸ் உள்ளிட்ட பயிர்களை சேதப்படுத்தின. பின்னர் அங்கிருந்து காமன்தொட்டி ஏரிக்கு சென்ற யானைக்கூட்டம், ஏரியில் உற்சாக குளியல் போட்டன. தற்போது அதே பகுதியில் உள்ள மாந்தோப்பில் முகாமிட்டுள்ளன. இதுகுறித்து வனத்துறையினருக்கு பொதுமக்கள் தகவல் அளித்தனர். அதன்பேரில் அங்கு வந்த வனத்துறையினர், 7 யானைகளையும் சானமாவு வனப்பகுதிக்கு விரட்ட நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

மூதாட்டி பலி: தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே மடம் செக்போஸ்ட் பகுதியை சேர்ந்தவர் முனியம்மாள்(70). இவர் ஒகேனக்கல் வனப்பகுதியில் கிழங்கு மற்றும் விறகுகளை சேகரித்து விற்பனை செய்து வந்தார். நேற்று காலை ஒகேனக்கல் வனப்பகுதிக்குட்பட்ட முண்டச்சிப்பள்ளம் பகுதியில், 11 வயது பேரனுடன், முனியம்மாள் விறகு எடுக்க சென்றுள்ளார். அப்போது, அந்த வழியாக வந்த ஒற்றை யானை முனியம்மாளை துரத்தி, தும்பிக்கையால் தூக்கிப்போட்டு மிதித்தது. இதில் அவர் இறந்தார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Hosur , Hosur, Nilgiri, elephants, chase, attack, murdered
× RELATED யானைகள் ஊருக்குள் வருவதை தடுக்க...