×

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள விவசாய பம்ப் ஷெட்களில் இருந்து சென்னைக்கு குடிநீர் பெற ஏற்பாடு: பற்றாக்குறையை சமாளிக்க அதிகாரிகள் நடவடிக்கை

சென்னை: பருவமழை ஏமாற்றிய நிலையில், சென்னைக்கு குடிநீர் வழங்கும் பூண்டி ஏரியில், தண்ணீர் இருப்பு குறைந்துள்ளது. இதையடுத்து, ராட்சத மின் மோட்டார்கள் மூலம் திருவள்ளூர் மாவட்ட விவசாய கிணறுகளில் இருந்து சென்னைக்கு குடிநீர் எடுத்து வர அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். சென்னைக்கு குடிநீர் வழங்குவதற்காக கடந்த 1944ம் ஆண்டு கொசஸ்தலை ஆற்றின் நடுவில் பூண்டி ஏரி கட்டப்பட்டது. இந்த ஏரி, கடந்த 2005ம் ஆண்டுக்கு பின்னர் பருவ மழை மற்றும் கிருஷ்ணா நீர்வரத்து காரணமாக நிரம்பியே காட்சி அளித்தது. கடந்த 3 ஆண்டுகளாக பருவமழை எதிர்பார்த்தபடி பெய்யவில்லை. மேலும், ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு வந்துகொண்டிருந்த தண்ணீரும் நிறுத்தப்பட்டு விட்டது. இதனால், பூண்டி ஏரியில் தற்போது குறைந்தளவு தண்ணீரே உள்ளது. ஏரியின் மொத்த கொள்ளளவான, 3231 மில்லியன் கன அடியில், நேற்றைய நிலவரப்படி, 600 மில்லியன் கன அடி தண்ணீர் மட்டுமே உள்ளது. சென்னை நகர மக்களின் தாகத்தை தீர்க்க இவை போதுமானதாக இல்லை. இதனால், பூண்டியை சுற்றியுள்ள புல்லரம்பாக்கம், கைவண்டுர், காரணை உட்பட பல்வேறு கிராமங்களில் உள்ள விவசாய பம்ப் ஷெட்களில் இருந்து, ஒப்பந்த அடிப்படையில் ராட்சத மின் மோட்டார்கள் மூலம் தண்ணீர் உறிஞ்சப்பட்டு நீர் உந்து நிலையத்தில் பெரிய தொட்டியில் சேகரித்து, அங்கிருந்து குழாய்களின் மூலம் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு அனுப்ப குடிநீர் வாரிய அதிகாரிகள் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கென, ஆங்காங்கே கிராமங்களில் உள்ள சென்னை குடிநீர் நீருந்து நிலையங்களையும், ராட்சத மின் மோட்டார்களையும் சீரமைக்கும் பணியில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். ராட்சத மின்மோட்டார் மூலம் நிலத்தடிநீர் உறிஞ்சப்படுவதால், நீர்மட்டம் குறைந்து திருவள்ளூர் நகராட்சி மற்றும் அதை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும், விவசாயிகளும் கடும் பாதிப்பு அடையும் நிலை உள்ளது. இதுகுறித்து கிராம விவசாயிகள் கூறுகையில், ‘‘கடந்த 2004ம் ஆண்டு பூண்டி ஏரி வறண்டதால், ஏரியை சுற்றி கிராமங்களில் உள்ள நீருந்து நிலையத்தில் ராட்சத மின்மோட்டார்கள் பொருத்தி, விவசாயிகளின் பம்ப் ஷெட் மூலம், ஒப்பந்த அடிப்படையில் தண்ணீர் உறிஞ்சப்பட்டு சென்னைக்கு அனுப்பப்பட்டது. இதனால், நிலத்தடிநீர் குறைந்து கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டதோடு விவசாயமும் பாதிக்கப்பட்டது. எனவே, இனி கிராமங்களில் இருந்து தண்ணீரை உறிஞ்சி சென்னைக்கு அனுப்பினால், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபடுவோம்’’ என்றனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Chennai ,Tiruvallur district , Tiruvallur, drinking water, agriculture, Chennai,
× RELATED திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரு கிராமம்...