×

இலங்கை நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருகிறோம்: இந்தியர்கள் 3 பேர் பலி...மத்தியமைச்சர் சுஷ்மா சுவராஜ் தகவல்

டெல்லி: இலங்கை குண்டுவெடிப்பு சம்பவத்தில் 3 இந்தியர்கள் உயிரிழந்துள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தகவல் தெரிவித்துள்ளார். உலகம் முழுவதும் கிறிஸ்துவ மக்களால், இயேசுபிரான் உயிர்த்தெழுந்த ஈஸ்டர் திருநாள் இன்று கொண்டாடப்படுகிறது. ஈஸ்டர் திருநாளை முன்னிட்டு, இலங்கையின் தலைநகரான கொழும்பின் அனைத்து பகுதிகளிலும் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் நள்ளிரவில் திருப்பலிகள் மற்றும் ஆராதனைகள் நடைபெற்று வந்தன. சனிக்கிழமை இரவு 8 மணிக்கு ஆரம்பித்த சிறப்புப் பிரார்த்தனை நள்ளிரவு வரை நீடித்தது. நள்ளிரவில் இயேசு உயிர்த்தெழுந்த காட்சி தத்ரூபமாக நடத்தி காண்பிக்கப்பட்டது. இந்நிலையில், இன்று காலை 8.45 மணியளவில் தலைநகர் கொழும்பு பகுதியில் உள்ள கொச்சிக்கடை புனித அந்தோணியார் தேவாலயத்தில் கிறிஸ்தவ மக்கள் பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்த போது திடீரென குண்டு வெடிப்பு சம்பவம் நடந்தது. குண்டு வெடித்ததில் தேவாலயத்தின் மேற்கூரைகள் பெரும்பகுதி சேதமடைந்தன. பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்த மக்கள், அலறியடித்துக் கொண்டு தப்பிக்க முயன்றனர். ஆனால், குண்டு வெடிப்பின் அதிர்ச்சியில் பலரும் அங்கேயே வீழ்ந்தனர். படுகாயத்துடன் இருந்தவர்கள் ஆபத்தான நிலையில் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இதேபோல், கொழும்புவில் 8 இடங்களில் அடுத்தடுத்து குண்டுவெடிப்பு நடந்தது. ஈஸ்டர் பண்டிகையை ஒட்டி தேவாலயத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டிருந்த நிலையில், குண்டுவெடிப்பு நடந்ததால் சர்ச்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. தீயணைப்பு மற்றும் மீட்புப் பணியாளர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். அதேபோல் குண்டுகளை செயலிழக்க செய்யும் பிரிவினர் மற்றும் விசேஷ அதிரடிப்படையினர் உள்ளிட்ட சில பாதுகாப்பு பிரிவுகளும் சம்பவ இடத்தை பார்வையிட்டு வருகின்றனர். மேலும், கொழும்பில் உள்ள ஷாங்ரி லா நட்சத்திர விடுதியிலும் குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளது. அங்கு தற்போது மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த சம்பவத்தில் குழந்தைகள் உட்பட 160 பேர் பலியானதாகவும், 300க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்ததாகவும் இலங்கையில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அத்துடன் காயமடைந்தவர்கள் காவு வண்டியூடாக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இலங்கை முழுவதும் உள்ள தேவாலய பகுதியில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அடுத்தடுத்த குண்டுவெடிப்பால் இலங்கையின் தலைநகரில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது. தொடர் குண்டு வெடிப்பு சம்பவத்தை அடுத்து வதந்திகள் பரவாமல் தடுக்க இலங்கையில் சமூக வலைத்தளங்கள் முடக்கப்பட்டன. பேஸ்புக் வாட்ஸ் ஆப், வைபர் உள்ளிட்ட சமூக வலைதளங்களை முடக்கி இலங்கை அரசு உத்தரவிட்டது. மேலும், இலங்கையில் ஊரடங்கு உத்தரவு அமல் படுத்தப்பட்டது. இன்று மாலை 6 மணி முதல் நாளை காலை 6 மணி வரை ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை - விடுதலைப்புலிகள் மோதலுக்கு பின்னர் நடந்த மிகப்பெரிய குண்டுவெடிப்பு தாக்குதலாக பார்க்கப்படுகிறது. இதுவரை எந்த ஒரு அமைப்பும் இந்த குண்டுவெடிப்பு சம்பவத்துக்கு பொறுப்பேற்காததால், உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில், சில வெளிநாட்டவர்களும் பாதிக்கப்பட்டிருக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. இலங்கையின் அதிபர் மைத்ரிபால சிறிசேனா, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவர்கள் குண்டு வெடிப்பு சம்பவத்துக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.

குண்டுவெடிப்பு தொடர்பாக இதுவரை 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என இலங்கை பாதுகாப்புத்துறை அமைச்சர் ரூவன் விஜயவர்தன தெரிவித்துள்ளார். குண்டுவெடிப்புகள் பெரும்பாலானவை தற்கொலை படை தாக்குதல் மூலம் நிகழ்த்தப்பட்டவை. இலங்கையில் 8 இடங்களில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தியவர்கள் ஒரே அமைப்பைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரிவித்துள்ளார். இந்நிலையில், தொடர் குண்டுவெடிப்புகளில் இந்தியர்கள் லோகாஷினி, நாராயண் சந்திர சேகர், ரமேஷ் ஆகியோர் பலியானதாக மத்தியமைச்சர் சுஷ்மா சுவராஜ் டுவிட்டர் பக்கத்தில் தகவல் தெரிவித்துள்ளார். இலங்கையில் உள்ள இந்திய தூதரிடம் நான் தொடர்ந்து பேசி அங்குள்ள சூழ்நிலையை குறித்து கேட்டு வருகிறேன். அங்குள்ள நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருகிறோம்’’ என்று தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்ட இந்தியர்கள் கொழும்பில் உள்ள இந்திய தூதரகத்தை அணுகலாம் என்றும் கூறியுள்ளார். மேலும், உதவிக்கான +94777903082, +94112422788, +94112422789 என்ற நம்பர்களையும் தெரிவித்துள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Sushma Swaraj ,Sri Lanka , Situation in Sri Lanka, Indians, murdered, middleman Sushma Swaraj
× RELATED இலங்கையில் கார் பந்தயத்தின் போது...