×

தண்ணீர் வராததால் பூண்டி ஏரி வறண்டது சென்னைக்கு குடிநீர் தட்டுப்பாடு அபாயம்

திருவள்ளூர்: ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து கிருஷ்ணா கால்வாய் வழியாக திருவள்ளூர்  அருகே உள்ள பூண்டி ஏரிக்கு தண்ணீர் கொண்டு வரப்படுகிறது. பின்னர் இங்கிருந்து சென்னை மக்களின் குடிநீருக்கு தண்ணீர்  அனுப்பப்படுகிறது. தற்போது கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு வரும் நீர் முற்றிலும் நிறுத்தப்பட்டுவிட்டது, இதனால் ஏரி வறண்டு கிடக்கிறது. பூண்டி ஏரியின் மொத்த கொள்ளளவு 3,231 மி.கன அடி. நேற்று காலை 9 மணி நிலவரப்படி 19 அடி நீர் இருப்பு உள்ளது. ஏரியில் இருந்து இணைப்பு கால்வாய் மூலம் சென்னை நகர மக்களின் குடிநீர் தேவைக்காக சுத்திகரிப்பு  நிலையத்துக்கு தண்ணீர் கொண்டு செல்ல முடியாமல் கால்வாயும் வறண்டு வருகிறது.

இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரி கூறுகையில், “பூண்டி ஏரியில் நீர் இருப்பு மிகவும் குறைவாக உள்ளது. இருக்கும் தண்ணீரை வைத்து சென்னை நகரின் குடிநீர் தேவையை சமாளிப்பது மிகவும் கடினம்” என்றார்.தமிழக, ஆந்திர அரசுக்கு இடையே போடப்பட்டுள்ள ஒப்பந்தப்படி ஆண்டுதோறும் 12 டிஎம்சி நீரை தமிழகத்திற்கு ஆந்திரா வழங்க வேண்டும். இந்த தண்ணீர் ஆண்டுதோறும் ஜூலை மாதம் முதல் வினாடிக்கு 1000 கன அடிக்கு  மிகாமல் அக்டோபர் மாதம் வரை தரவேண்டும். அதன்பின் அடுத்த ஆண்டு ஜனவரி முதல் ஏப்ரல் மாதம் வரை வினாடிக்கு 1000 கன அடிவீதம் திறந்து விடவேண்டும்.

இவ்வாறு ஜூலை முதல் அக்டோபர் வரை 8 டிஎம்சியும் அடுத்ததாக ஜனவரி முதல் ஏப்ரல் வரை 4 டிஎம்சியும் அளிக்கவேண்டும். தற்போது தண்ணீர் இருப்பை பொறுத்து சென்னைக்கு தண்ணீர் தரப்பட்டு வருகிறது. சைலம்,  சோமசீலா, கண்டலேறு அணைகளில் நீர் இருப்பையும் ஆந்திராவின் தேவையையும் கருத்தில் கொண்டு தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. இதன்படி ஜூலை முதல் அக்டோபர் வரை வழங்கவேண்டிய 8 டிஎம்சி தண்ணீரை இதுவரை  ஆந்திர அரசு வழங்கவில்லை. இதனால் சென்னை நகருக்கு குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம் உள்ளது. இவ்வாறு தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Pondi Lake ,Chennai , Water, Pondi Lake, Chennai, Water scarcity, Risk
× RELATED சென்னை மெரினா கடற்கரை வருவோருக்கு நேரக் கட்டுப்பாட்டு?