×

இலங்கை குண்டுவெடிப்பு தொடர்பாக இதுவரை 7 பேர் கைது: பாதுகாப்புத்துறை அமைச்சர் ரூவன் விஜயவர்தன தகவல்

கொழும்பு: இலங்கை குண்டுவெடிப்பு தொடர்பாக இதுவரை 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என இலங்கை பாதுகாப்புத்துறை அமைச்சர் ரூவன் விஜயவர்தன தெரிவித்துள்ளார். தேவாலையங்கள் மற்றும் நட்சத்திர ஹோட்டல்கள் உட்பட 8 இடங்களில் குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. கிறிஸ்தவர்கள் உலகம் முழுவதும் கொண்டாடப்படும் பண்டிகைகளில் முக்கியமானது ஈஸ்டர். இயேசு கிறிஸ்து மரித்து உயிர்த்தெழுந்ததையே ஈஸ்டர் என கிறிஸ்தவர்கள் கொண்டாடுகின்றனர். ஈஸ்டர் பண்டிகையை ஒட்டி கொழும்பில் உள்ள கிருஸ்தவ தேவாலயங்களில் காலையில் சிறப்பு பிராத்தனைகள் நடைபெற்று வந்தன. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

இலங்கையில் குண்டுவெடிப்பு

இலங்கை தலைநகர் கொழும்புவில் இன்று 3 கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் 3 நட்சத்திர ஓட்டல்கள் என 6 இடங்களில் நடைபெற்ற குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளது. இதனை தொடர்ந்து இலங்கையில் தெஹிவளை என்ற இடத்தில் உள்ள ஹோட்டலில் பிற்பகல் சுமார் 2 மணியளவில் 7வது குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. மதியம் 2.45 மணியளவில் டெமாட்டாகொடா என்ற ( 8 வது குண்டுவெடிப்பு) பகுதியில் குண்டு வெடித்தது. 8-வது இடத்தில் குண்டு வெடித்ததால் இலங்கையில் உச்சகட்ட பதற்றம் நிலவி வருகிறது. இந்த குண்டு வெடிப்பில் இதுவரை 160 பேர் உயிரிழந்துள்ளனர் மேலும் பலர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இலங்கையில் சமூக வலைதளங்கள் முடக்கம்

தொடர் குண்டு வெடிப்பு சம்பவத்தை அடுத்து வதந்திகள் பரவாமல் தடுக்க இலங்கையில் சமூக வலைத்தளங்கள் முடக்கப்பட்டன. பேஸ்புக் வாட்ஸ் ஆப், வைபர் உள்ளிட்ட சமூக வலைதளங்களை முடக்கி இலங்கை அரசு உத்தரவிட்டது.

இலங்கையில் ஊரடங்கு உத்தரவு அமல்

தொடர் குண்டுவெடிப்பை அடுத்து இலங்கையில் ஊரடங்கு உத்தரவு அமல் படுத்தப்பட்டது. இன்று மாலை 6 மணி முதல் நாளை காலை 6 மணி வரை ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை குண்டுவெடிப்பு 7 பேர் கைது

குண்டுவெடிப்பு தொடர்பாக இதுவரை 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என இலங்கை பாதுகாப்புத்துறை அமைச்சர் ரூவன் விஜயவர்தன தெரிவித்துள்ளார். குண்டுவெடிப்புகள் பெரும்பாலானவை தற்கொலை படை தாக்குதல் மூலம் நகழ்த்தப்பட்டவை. இலங்கையில் 8 இடங்களில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தியவர்கள் ஒரே அமைப்பைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரிவித்துள்ளார். 


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Ruwan Wijayawardene ,Sri Lanka , Sri Lanka blast, 7 people arrested, Ruwan Wijayawardena
× RELATED நாகையில் இருந்து இலங்கைக்கு மீண்டும்...