×

அக்காவுக்கு தூக்கம் போச்சு: மோடி கிண்டல்

மேற்கு வங்கத்தில் மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படுகிறது. இதுவரை இங்கு 2 கட்டத் தேர்தல் முடிந்துள்ளது. 3ம் கட்டத் தேர்தல் நாளை மறுதினம் நடக்கிறது. இதற்கான பிரசாரத்தில் பிரதமர் மோடி தீவிரமாக  ஈடுபட்டுள்ளார். இம்மாநிலத்தில் உள்ள தெற்கு தினாஜ்பூர் மாவட்டத்தின் புனியாத்பூரில் நேற்று நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் மோடி பங்கேற்றார். அதில், மேற்கு வங்க முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான  மம்தா பானர்ஜியை கடுமையாக விமர்சித்தார். அவர் பேசியதாவது:  தாய், நிலம் மற்றும் மக்கள் என்ற பெயரில் மக்களை முட்டாளாக்கி ஒருவர் (மம்தா பானர்ஜி) ஆட்சி செய்து வருகிறார். மேற்கு வங்கத்தில் 2 கட்ட மக்களவை  தேர்தல் முடிந்துள்ள நிலையில், ‘ஸ்பீடு பிரேக்கர்’ அக்கா (மம்தா பானர்ஜி), தூக்கமின்றி தவித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. பக்கத்து நாட்டு நடிகர்களை திரிணாமுல் காங்கிரஸ் பிரசாரத்துக்காக பயன்படுத்துவது  வெட்கக்கேடானது. இது, இந்தியாவில் இதுவரை நடைபெறாத புது சம்பவம்.

மேற்கு வங்கத்தில் நடைபெற்ற சிட்பண்ட் ஊழல் தொடர்பாக ஆதாரங்கள் கேட்கப்பட்டதை தெடர்ந்து, பாகிஸ்தானின் பாலகோட்டில் நமது விமானப்படை நடத்திய தாக்குதலுக்கு ஆதாரம் கேட்கிறார் மம்தா. தேசிய ஜனநாயக   கூட்டணி மீண்டும் ஆட்சிக்கு வந்ததும் எல்லையில் அத்துமீறி நடைபெறும் ஊடுருவலை முற்றிலும் தடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். வங்கப் பிரிவினையின் போது மற்ற நாடுகளில் தங்கியவர்கள் மதம் மற்றும்  நம்பிக்கையின் பெயரல் அந்த நாடுகளில் பல்வேறு இன்னல்களுக்கு உள்ளாகி வருகின்றனர். அவர்களை பாதுகாப்பது இந்திய குடிமக்கள் ஒவ்வொருவரின் கடமையாகும். இதற்காக நாடாளுமன்றத்தில் குடிமக்கள் தொடர்பான  மசோதாவை கொண்டு வருவது எங்கள் நோக்கமாகும். ஆனால், இந்த விவகாரத்தில் காங்கிரஸ், திரிணாமுல், இடதுசாரி கட்சிகள் மக்களை தவறாக வழி நடத்துக்கின்றன. ஆனால், நாங்கள் அவர்களுடன் இணைந்து பணியாற்ற  காத்திருக்கிறோம். மேற்கு வங்கத்தில் மக்களிடம் வழிப்பறி செய்யும் வகையிலான வரிவிதிப்பை அமல்படுத்த மம்தா விரும்புகிறார். இவ்வாறு மோடி பேசினார்.

முன்னதாக, பீகார் மாநிலத்தில் உள்ள அரேரியாவில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய மோடி, ’’மக்களவைக்கு 2 கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்துள்ள நிலையில் எதிர்க்கட்சியும், அதன் கூட்டணி  கட்சிகளும் பீதி அடைந்துள்ளன. இடஒதுக்கீடு இல்லாத மக்களுக்கு மத்திய அரசு 5 சதவீத ஒதுக்கீடு வழங்கிய விவகாரத்தில் பொய்யான தகவல்கள் பரப்பப்பட்டு வருகிறது. இது குறித்து நீங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.  நாட்டில் இருவகையான அரசியல் நடைபெற்று வருகிறது. ஒன்று, தேசபக்தி அரசியல். மற்றொன்று, வாக்கு வங்கி அரசியல். வாக்கு வங்கி அரசியல் மும்பை தாக்குதலுக்கு பிறகு தொடங்கியுள்ளது’’ என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : sister ,Modi , Sleeping,sister, Modi
× RELATED பிரதமர் மோடியின் பேச்சுக்காக...