×

உலகளவில் 20ம் நூற்றாண்டில் நடந்த பெரிய தொழிற்சாலை விபத்துகளில் போபால் விஷ வாயு கசிவும் ஒன்று: ஐநா அறிக்கையில் தகவல்

ஐநா: இருபதாம் நூற்றாண்டில் உலகளவில் நடந்த மிகப்பெரிய தொழிற்சாலை விபத்துகளில் போபால் விஷ வாயு கசிவு விபத்தும் ஒன்று என்று ஐநா சபையின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையில்  உள்ள தொழிலாளர் அமைப்பான சர்வதேச தொழிலாளர் அமைப்பு (ஐஎல்ஓ) ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், உலகளவில் இருபதாம் நூற்றாண்டில் நடந்த மிகப்பெரிய தொழிற்சாலை விபத்துகள் பற்றி குறிப்பிடப்பட்டு  இருக்கிறது.  அதில், கடந்த 1919க்கு பின்னர் நடந்த மிகப்பெரிய தொழிற்சாலை விபத்துகளில் போபால் விஷ வாயு கசிவு சம்பவமும் ஒன்று என கூறப்பட்டுள்ளது. மேலும் அதில், ‘கடந்த 1984ல் போபாலில் உள்ள யூனியன்  கார்பைடு பூச்சிக் கொல்லி மருந்து தயாரிப்பு தொழிற்சாலையில் இருந்து ‘மித்தேல் ஐசோனைடு’ என்ற விஷவாயு 30 டன் அளவில் திடீரென கசிந்தது. இதனால், , ஓர் ஆண்டில்  சுமார் 15,000 பேர் உயிரிழந்து விட்டனர்.  ஏராளமானவர்கள் கண் பார்வை இழந்து ஊனமடைந்தனர்’ என கூறப்பட்டுள்ளது.

மிகப் பெரிய விபத்துகள் பட்டியலில் செர்னோபில், புகுஷிமா அணு உலை விபத்துகள், ராணா பிளாசா கட்டிடம் இடிந்தது உள்ளிட்ட விபத்துகள் இடம் பெற்றுள்ளன. உக்ரைனின் செர்னோபில் அணுமின் உற்பத்தி செய்யும் நான்கு  அணு உலைகளில் ஒன்று வெடித்தது. இந்த கோர விபத்தில் 31 பேர் உடனடியாக இறந்தனர். பின்னர், ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். கடந்த 2011 மார்ச் மாதத்தில் 9.0 புள்ளிகள் அளவில் ஏற்பட்ட பயங்கர பூகம்பம்,  சுனாமி ஜப்பானின் வடகிழக்கு பகுதியை தாக்கியது. இதனால், புகுஷிமா அணு உலை சீர்குலைந்தது. இதனால் ஏற்பட்ட வெடிவிபத்து கதிர்வீச்சால் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டனர். இதேபோல், வங்கதேசத்தின்  டாக்காவில் ராணா பிளாசா கட்டிடம் கடந்த 2013ல் இடிந்து விழுந்தது. இதில் 1,132 பேர் உயிரிழந்தனர், 2,500க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர். சமீபத்திய ஆய்வுகள் மூலம் திரட்டப்பட்ட தகவல்களில், ஒவ்வொரு ஆண்டும்  தொழிற்சாலை விபத்துகள், பணியினால் ஏற்படும் நோய்கள் காரணமாக சராசரியாக 37.04 லட்சம் தொழிலாளர்கள் பாதிக்கப்படுகின்றனர் என தெரியவந்துள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Bhopal ,factories ,UN , B20th Century, Big Factory, Accident, Bhopal Gas Trigger, UN
× RELATED ஆலைகளுக்கு குறைந்தபட்ச மின்கட்டணமே வசூலிக்க வேண்டும்.: ஐகோர்ட் உத்தரவு