×

வாக்குப்பதிவு இயந்திரம் உள்ள ராணிமேரி கல்லூரியில் மின் கசிவால் தீ விபத்து

சென்னை: மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் வைக்கப்பட்டுள்ள ராணிமேரி கல்லூரியில் உயர் மின்அழுத்தம் காரணமாக தீவிபத்து ஏற்பட்டு புகை வெளியேறியது. இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.  மெரினா காமராஜர் சாலையில் ராணிமேரி கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியின் பொன்விழா கலையரங்க கட்டிடத்தில் நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் வடசென்னை தொகுதிக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. இங்கு வாக்குப்பதிவு எண்ணிக்கை நடைபெற உள்ள மையத்தில் லதா எலக்ட்ரானிக்ஸ் என்கிற தனியார் நிறுவனத்தின் மூலம் வளாகம் முழுவதும் மின்சார விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்று முன்தினம் மின் இணைப்பு கொடுக்கப்பட்டிருந்த பெட்டியில் உயர் மின்அழுத்தம் காரணமாக திடீரென புகை வந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த போலீசார் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

அதன்படி சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் உடனடியாக மின் இணைப்பை துண்டித்தனர். இதனால் எந்தவிதமான அசம்பாவித சம்பவமும் நடைபெறாமல் தடுக்கப்பட்டது. இதையடுத்து மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதால் மின்விளக்குகள் அனைந்து கல்லூரி வளாகம் இருளில் மூழ்கியது. இதுதொடர்பாக, போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையில் திடீரென தீப்பிடித்து புகை வந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Fire accident ,Queen Mary College , Fire accident , Queen Mary College,voting machine
× RELATED தீ விபத்து நிவாரணம் வழங்கல்