4 தொகுதிக்கான இடைத்தேர்தல் நடைபெறுவதால் நடத்தை விதி தொடர்ந்து அமலில் இருக்கும்: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தகவல்

சென்னை: தமிழகத்தில் மக்களவை தேர்தல் முடிவடைந்தாலும், 4 சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் மே மாதம் 19ம் தேதி நடைபெறுவதால் தேர்தல் நடத்தை விதிமுறைகள் தொடர்ந்து அமலில் இருக்கும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி கூறினார்.தமிழகத்தில், வேலூர் தொகுதியை தவிர 38 தொகுதிக்கான மக்களவை தேர்தல் மற்றும் 18 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த வியாழக்கிழமை (18ம் தேதி) நடைபெற்று முடிந்துள்ளது. தமிழகத்தில் வாக்குப்பதிவுகள் பொதுவாக அமைதியான முறையிலேயே நடந்து முடிந்ததாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு கூறினார்.இந்த நிலையில், தமிழகத்தில் மக்களவை தேர்தல் நடைபெற்று முடிந்தாலும் வாக்கு எண்ணிக்கை மே 23ம் தேதிதான் நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கைக்கு இன்னும் 32 நாட்கள் காத்திருக்கும் நிலை உள்ளது.வழக்கமாக தேர்தல் முடிந்து, இதுபோன்று வாக்கு எண்ணிக்கைக்கு அதிக நாட்கள் இருந்தால், தேர்தல் நடத்தை விதிமுறைகளை தேர்தல் ஆணையம் கொஞ்சம் தளர்த்தி அறிவிக்கும். அதன்படி, முதல்வர், அமைச்சர்கள் துறை சார்ந்த ஆய்வு கூட்டங்களை தலைமை செயலகத்தில் அதிகாரிகளுடன் நடத்த அனுமதிக்கப்படும்.ஆனால், தற்போது தமிழகத்தில் காலியாக உள்ள மேலும் 4 சட்டமன்ற தொகுதியான ஓட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, சூலூர் ஆகிய தொகுதிகளில் வருகிற மே மாதம் 19ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளதாக தேர்தல் ஆணையம் கடந்த 10 நாட்களுக்கு முன் அறிவித்தது. அதன்படி, இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நாளை (22ம் தேதி) தொடங்குகிறது.தமிழகத்தில் இடைத்தேர்தல் நடைபெறுவதால், மே 23ம் தேதி வரை தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருக்கும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு கூறும்போது, ”தமிழகத்தில் மக்களவை மற்றும் 18 சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் முடிவடைந்தாலும் 4 தொகுதிக்கான இடைத்தேர்தல் வருகிற மே மாதம் 19ம் தேதி நடைபெறுவதால் தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் தொடர்ந்து அமலில் இருக்கும். அமைச்சர்கள், தேர்தல் பணிக்காக செல்லும்போது அரசு வாகனங்களை பயன்படுத்தக்கூடாது. அதேபோன்று அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் சந்தித்து ஆலோசனை நடத்தக்கூடாது. முக்கிய ஆலோசனைகள் குறித்து விவாதிக்கும்போது தேர்தல் ஆணையத்தின் அனுமதிகளை பெற வேண்டும். தலைமை செயலகம் வரும்போது மட்டுமே அரசு வாகனங்களை பயன்படுத்த வேண்டும். அதேபோன்று இடைத்தேர்தல் நடைபெறும் மாவட்டம் முழுவதும் பறக்கும் படை மற்றும் கண்காணிப்பு குழுவினர் தொடர்ந்து வாகன சோதனையில் ஈடுபடுவார்கள். வருமான வரித்துறையினரும் தொடர்ந்து தமிழகம் முழுவதும் பண நடமாட்டம் குறித்த கண்காணிப்பு பணிகளில் ஈடுபடுவார்கள்” என்றார். இடைத்தேர்தல் நடைபெறும் மாவட்டங்களில் பறக்கும் படை தொடர்ந்து வாகன சோதனையில் ஈடுபடுவர். வருமான வரித் துறையினரும் பண நடமாட்டம் குறித்த கண்காணிப்பு பணிகளில் ஈடுபடுவார்கள்

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

× RELATED உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக கூறியது தனிப்பட்ட கருத்து: கராத்தே தியாகராஜன்