×

நாளை ஈஸ்டர் திருநாள் கொண்டாட்டம்: வேளாங்கண்ணியில் சிறப்பு பிரார்த்தனை

நாகை: புனித வெள்ளியை முன்னிட்டு வேளாங்கண்ணி பேராலயத்தில் சிலுவை முத்தி செய்யும் நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர். நாளை ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட தினத்தை உலகமெங்கும் உள்ள கிறிஸ்தவர்கள் புனித வெள்ளி நாளாக அனுசரித்து வருகின்றனர். உலக மக்களுக்காக இயேசு கிறிஸ்து, சிலுவைத் தண்டனையை மனமுவந்து ஏற்று கொண்ட இந்த தினத்தை கிறிஸ்தவர்கள் துக்க நாளாக கடைப்பிடிக்கிறார்கள். இதற்காக கிறிஸ்தவர்கள் 40 நாட்கள் தவகாலமாக ஏற்று, விரதமிருந்து இயேசு கிறிஸ்துவை ெஜபித்து வருவார்கள். சிலுவையில் அறையப்பட்ட 3ம் நாள் இயேசு கிறிஸ்து மீண்டும் உயிர்த்தெழும் நாளே ஈஸ்டர் பண்டிகையாக கிறிஸ்தவர்களால் கொண்டாடப்படுகிறது.

வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் கடந்த 14ம் தேதி குருத்தோலை ஞாயிறு நிகழ்ச்சி நடைபெற்றது. இயேசு கிறிஸ்து குரு, சீடர் வித்தியாசமின்றி தன் இறப்பிற்கு முன் தன் சீடர்களின் பாதங்களை கழுவி புனிதம் செய்து வைத்தார். அந்நிகழ்ச்சியை நினைவு கூரும் வகையில், வேளாங்கண்ணி பேராலய பிரார்த்தனை மண்டபத்தில் நேற்றுமுன்தினம் மாலை பாதம் கழுவும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை முன்னிட்டு பேராலய அதிபர் பிரபாகரன் அடிகளார் தலைமையில் சிறப்புதிருப்பலி நடைபெற்றது. திருப்பலிக்கு பிறகு பேராலய அதிபர் பிரபாகரன் அடிகளார், பயிற்சி குருமார்களின் பாதங்களை கழுவி முத்தமிட்டார். பின்னர் அவர்களது கால்களில் மல்லிகை பூவை தூவி அர்ச்சித்தார்.

நேற்று மாலை பெரிய வெள்ளியை முன்னிட்டு, வேளாங்கண்ணி பேராலய பிரார்த்தனை மண்டபத்தில் சிலுவை முத்தி செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக பேராலய அதிபர் பிரபாகரன் அடிகளார், பங்குத்தந்தை சூசைமாணிக்கம் அடிகளார் ஆகியோர் தலைமையில் சிறப்பு திருப்பலி, பொதுமன்றாட்டு, சிலுவை ஆராதனை நடந்தது. பின்னர் சிலுவையில் அறையப்பட்ட இயேசு கிறிஸ்துவின் பாதங்களை தொட்டு பேராலய அதிபர் பிரபாகரன் அடிகளார் உள்ளிட்ட பாதிரிமார்கள் கண்ணீர் விட்டு முத்தி செய்தனர். இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் மற்றும் பிற மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். இயேசுநாதர் உயிர்தெழுந்த திருநாள்(ஈஸ்டர்) நாளை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி நாளை அதிகாலை முதல் வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா ஆலயத்தில் பல்வேறு மொழிகளில் சிறப்பு ஆராதனை நடைபெறும். இதில் கலந்து கொள்ள பக்தர்கள் வேளாங்கண்ணியில் குவிந்த வண்ணம் உள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Velankanni , Velankanni, Easter Ceremony
× RELATED பழங்குடி பெண்களுக்கு நடமாடும் சிற்றுண்டி வாகனம்