×

கொளுத்தும் கோடை வெயில் வறட்சியால் காய்ந்து கருகும் புளியமரங்கள்

* இலைகள் உதிர்ந்து மொட்டையாக காட்சியளிப்பு

சேலம் :  கடும் வெயில் காரணமாக சாலையோரம் உள்ள புளியமரங்களில் இலைகள் உதிர்ந்து மொட்டையாக காட்சியளிக்கின்றன. சேலம் மாவட்டத்தில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு, சாலையோரங்களில் நூற்றாண்டு பழமையான புளியமரங்கள் ஏராளமான இருந்தன. இந்த மரங்களில் கிடைத்த புளியை ஏலம் விடுவதன் மூலம் அரசுக்கு அதிக வருவாய் கிடைத்தது. இந்த நிலையில், பெரும்பாலான சாலைகள் நான்கு வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யப்பட்டதால், சாலையோரம் இருந்த ஆயிரக்கணக்கான புளியமரங்கள் வெட்டப்பட்டன. இதனால், பெரும்பாலான 4 வழிச்சாலைகளில் மரங்களே இல்லை.

சேலம் மாவட்டத்தில் அரியானூர்-ஆட்டையாம்பட்டி சாலை, ஆட்டையாம்பட்டி- திருச்செங்கோடு சாலை, வாழப்பாடி- செந்தாரப்பட்டி சாலை, அயோத்தியாப்பட்டணம்- அரூர் சாலை, தலைவாசல்- தம்மம்பட்டி சாலை, வாழப்பாடி-பேளூர் சாலை உள்ளிட்ட சாலைகளில் மட்டுமே புளியமரங்கள் உள்ளன. இதில் அயோத்தியாப்பட்டணம்- அரூர் சாலையில், மழைக்காலத்தில் புளிய மரங்கள் நன்கு வளர்ந்து பச்சை போர்வை போர்த்தியது போல், சாலையின் இருபுறமும் நிழல் இருக்கும்.

இந்த நிலையில், தமிழகம் முழுவதும் கடந்த பிப்ரவரி இறுதி வாரத்தில், வெயிலின் தாக்கம் அதிகரிக்க தொடங்கியது. தமிழகத்தில் பாதி மாவட்டங்களில் அக்னி நட்சத்திரம் போல் வெயில் கொளுத்தி வருகிறது. சேலம், நாமக்கல், தர்மபுரி, ஈரோடு, வேலூர், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. சேலத்தில், கடந்த ஒரு மாதமாக 100 முதல் 105 பாரன்ஹீட் வெப்பநிலை வெயில் கொளுத்தி வருகிறது. கடும் வெயிலின் காரணமாக ஏற்காடு, ஜருகுமலை, நாமமலை, ஊத்துமலை, கஞ்சமலை உள்ளிட்ட மலைகளில் மரங்கள் காய்ந்து வருகின்றன.

கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு பெரும்பாலான மலைகளில் பெரிய அளவில் தீ விபத்து ஏற்பட்டது. மேலும், போதிய தண்ணீர் இல்லாமல் மரங்களும் காய்ந்து வருகின்றன. அயோத்தியாப்பட்டணம்- அரூர் ரோட்டில் கோடையில் ஓரளவுக்கு புளிய மரங்களில் பசுமை தென்படும். ஆனால், நடப்பாண்டு கடந்த 6 மாதத்திற்கு மேலாக மழை இல்லாததால், அரூர் மெயின் ரோட்டில் புளியமரங்களில் இலைகள் உதிர்ந்து மொட்டையாக காட்சியளிக்கின்றன.

இது குறித்து அப்பகுதி விவசாயிகள் கூறுகையில், ‘அயோத்தியாப்பட்டணம்- அரூர் சாலையில் கோடையில் சற்று தண்ணீர் இருக்கும். நடப்பாண்டு மழை இல்லாததால் கிணறு, போர்வெல்களில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்துவிட்டது. விவசாய பணிகள் 75 சதவீதம் நடைபெறவில்லை. இதுநாள் வரை கோடை மழையும் பெய்யவில்லை. மாதக்கணக்கில் மண் காய்ந்து வருவதால் நிலத்தில் ஈரப்பதம் இல்லை. இதன் காரணமாக சாலையோர புளியமரங்கள் இலைகளை உதிர்த்து மொட்டையாக காட்சியளிக்கின்றன. இரண்டு மழை பெய்தால் போதும், மரங்களுக்கு போதுமான தண்ணீர் கிடைத்து, இலைகள் துளிர்த்து பசுமையாக காட்சியளிக்கும்,’ என்றனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Winters , summer ,Winters , tree, salem
× RELATED பகலில் வெயில் சுட்டெரித்த நிலையில்...