×

தூத்துக்குடி-திருச்செந்தூர் சாலையில் 15 கி.மீ தூரத்தில் 22 இடங்களில் பேரிகார்டுகளால் விபத்து அபாயம்

ஆறுமுகநேரி : தூத்துக்குடி-திருச்செந்தூர் சாலையில் 15 கி.மீ. தூரத்தில் 22 இடங்களில் வைக்கப்பட்டுள்ள பேரிகார்டுகளால் விபத்து அபாயம் ஏற்படுகிறது. தூத்துக்குடியில் இருந்து திருச்செந்தூர் கோயில், மணப்பாடு, உவரி, கன்னியாகுமரி செல்பவர்கள் தூத்துக்குடி -திருச்செந்தூர் சாலையை பயன்படுத்துகின்றனர். மேலும் ஆன்மீக சுற்றுலா செல்பவர்கள் பெரிதும் இச்சாலையை பயன்படுத்துகின்றனர். தற்போது தூத்துக்குடியில் இருந்து முக்காணி வரை சாலை அகலப்படுத்தப்பட்டுள்ளது.

இதனால் போக்குவரத்து நெருக்கடியில் இருந்து தற்போது விடிவு பிறந்துள்ளது என வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால் சில நாட்களிலேயே செயற்கையாக சாலையில் போக்குவரத்து நெருக்கடியை அதிகாரிகள் ஏற்படுத்தியுள்ளனர்.  முக்காணியில் இருந்து தூத்துக்குடி வரை சாலையின் நடுவே பெரிய பேரிகார்டுகள் வைக்கப்பட்டுள்ளது.

அதாவது முக்காணி பல்க் பகுதி, முக்காணி பத்ரகாளி அம்மன்கோயில் பகுதி, ராமச்சந்திராபுரம், தாமரை ஹோட்டல் பகுதி, பழையக்கால் பேரூந்து நிறுத்தம் அருகில், சர்வோதையாபுரி, பெட்ரோல் பங்க், சீர்கோனியம் குடியிருப்பு பகுதி, கோவங்காடு விலக்கு, புல்லாவெளி, உப்பாத்து பாலம், சாண்டி காலேஜ், முள்ளக்காடு பஸ் ஸ்டாப், சவேரியார் புரம், ஸ்பிக் கேட், அத்திமரபட்டி, முத்தையாபுரம் காவல்நிலையம், முத்தையாபுரம் ஜங்சன், முத்தையாபுரம் பஸ் ஸ்டாப்பு முன்பு என 22 இடங்களில் பேரிகார்டுகள் வைக்கப்பட்டுள்ளன.  

குறிப்பாக 500 மீட்டருக்குள் 2 பேரிகார்டுகள் வைக்கப்பட்டுள்ளன.  இதனால் கன்டெய்னர் லாரிகள், மற்றும் தனியார் தொழிற்சாலைகளுக்கு வரும் பெரிய வாகனங்கள் பேரிகார்டில் வளைந்து வருவது சிரமமாக உள்ளது. மேலும் இந்த பேரிகார்டுகளால் திருச்செந்தூரில் இருந்து தூத்துக்குடிக்கு செல்லும் பயண நேரம் அதிகரித்துள்ளது. இதனால் வாகன ஓட்டிகள், பயணிகள், மாணவ மாணவியர்கள்,  மற்றும் இருசக்கர வாகன ஓட்டிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.  

 கடந்த வாரத்தில் பேரிகார்டுகளால் இரண்டு விபத்துகள் ஏற்பட்டு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த பேரிகார்டுகளால் பெரிய விபத்துகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளது. நேர் நேர் திசையில் வருபவர்கள் ஹெட் லைட் ஆன் செய்து, தான் முதலில் வருவதற்கு சிக்னல் கொடுக்கின்றனர். இதனால் இரண்டு வாகனங்களும் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளது.  எனவே  தேவையில்லாமல் 15 கிலோமீட்டர் தொலைவுக்குள் 22 இடங்களில் வைக்கப்பட்டுள்ள பேரிகார்டுகளை குறைக்க வேண்டுமென்றும், தேவையில்லாத இடங்களில் உள்ளவற்றை அகற்ற வேண்டும் எனவும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : places ,road ,Thoothukudi-Tiruchengore , tiruchendur ,Thoothukudi,Barrycades , police,
× RELATED தமிழ்நாட்டில் 7 நாட்களுக்கு ஓரிரு...