×

கூடலூர் அருகே மங்கலதேவி மலையில் உள்ள கண்ணகி கோயிலில் சித்ரா பவுர்ணமி விழா: தமிழக-கேரள பக்தர்கள் பங்கேற்பு

கூடலூர்: கூடலூர் அருகே மங்கலதேவி மலையில் உள்ள கண்ணகி  கோயிலில் நேற்று சித்ரா பவுர்ணமி திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. தேனி மாவட்டம், கூடலூர் அருகே வண்ணாத்திப்பாறையில் தமிழக - கேரள எல்லையில் உள்ள மங்கலதேவி மலையில் கண்ணகி கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதம், வரும் பவுர்ணமி தினத்தன்று சித்திரை முழுநிலவு விழா, மங்கலதேவி கண்ணகி விழா, பூமாரி விழா என முப்பெரும் விழா நடைபெறும். நடப்பாண்டுக்கான திருவிழா கடந்த 2 வாரங்களுக்கு முன்பு பளியன்குடி ஆதிவாசி குடியிருப்பு பகுதியில் கொடியேற்றத்துடன் துவங்கியது.

சித்ரா பவுர்ணமி தினமான நேற்று அதிகாலை 5 மணிக்கு பள்ளி உணர்த்தல், 6 மணிக்கு மேல் மலர் வழிபாடு, யாக பூஜை மற்றும் மங்கல இசை நிகழ்ச்சி நடந்தது. காலை 8 மணிக்கு மேல் பொங்கல் வைத்து பிரசாதம் வழங்குதல், பால் குடம் எடுத்தல் மற்றும் பக்தர்களுக்கு திருமாங்கல்யம், வளையல் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. மாலை 6 மணிக்கு பூமாரி விழா நடைபெற்றது. விழாவையொட்டி காலை 6 மணி முதல் கூடலூர் பளியன்குடி வழியாக நடந்தும், குமுளி கொக்கரக்கண்டம் வழியாக ஜீப் மூலமாகவும் கோயிலுக்கு தமிழகம், கேரளாவை சேர்ந்த பக்தர்கள் வந்தனர்.

பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்குள் கோயில் உள்ளதால் இரு மாநில அரசுகள் சார்பில் பக்தர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது. புகையிலை, சிகரெட், போன்ற போதை வஸ்துகள், பிளாஸ்டிக் பெருட்கள் கொண்டு செல்ல தடை செய்யப்பட்டது. பக்தர்கள் மெட்டல் டிடெக்கர் கருவி மூலம் சோதனை செய்த பின்னரே கோயிலுக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனர். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். பக்தகளின் வசதிக்காக தமிழ்நாடு அரசு போக்குவரத்து சார்பில் கம்பத்திலிருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : ceremony ,Chitra Poornima ,hills ,Kannagi temple ,Kodalur ,Tamilnadu-Kerala , Koodalur, Mangaladevi, Hill, Kannaki, Temple, Chitra Poornima, Festival
× RELATED விநாயகர் கோயில் கும்பாபிஷேக விழா