×

பூத் ஏஜென்டுகள் வெளியேறிய சிறிது நேரத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்களின் சீல் உடைப்பு

* அனைத்து கட்சியினர் முற்றுகை „

* காஞ்சிபுரம் அருகே பரபரப்பு


சென்னை: காஞ்சிபுரம் அருகே வாக்குப்பதிவு முடிந்து, பூத் ஏஜென்டுகள் முன்னிலையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு வைக்கப்பட்ட சீலை, யாரும் இல்லாத  நேரத்தில் தேர்தல் அலுவலர் உடைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதுபற்றி அறிந்த அனைத்து கட்சியினர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகத்தில் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நேற்று முன்தினம் நடந்தது. அதன்படி, காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதியில் உத்திரமேரூர்  தொகுதிக்கு உட்பட்ட காவாந்தண்டலம் மற்றும் வயலூர் ஊராட்சியில் உள்ள வாக்குச்சாவடி மையங்களில் வாக்குப்பதிவு நடைபெற்றது. மேற்கண்ட வாக்குச்சாவடி மையங்களில்  1,228 வாக்குகள் பதிவாகின.இதையடுத்து, வாக்குப்பதிவில் கலந்துகொண்ட அனைத்து கட்சிகளின் ஏஜென்டுகள் முன்னிலையில், தேர்தல் அதிகாரிகள் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு சீல்  வைத்தனர். பின்னர், அந்த இயந்திரங்கள் வாகனத்தில் ஏற்ற தயாராக இருந்தன.கட்சி ஏஜென்டுகள் வாக்குச் சாவடியில் இருந்து வெளியேறிய சிறிது நேரத்தில், பணியில் இருந்த தேர்தல் அலுவலர் கோட்டீஸ்வரன் என்பவர், வாக்குப்பதிவு இயந்திரங்களின்  சீலை உடைத்துள்ளார்.


இதுபற்றி அறிந்த அனைத்து கட்சி நிர்வாகிகள் மற்றும் கட்சி ஏஜென்டுகள் அங்கு திரண்டு, ‘‘வாக்குப்பதிவு இயந்திரங்களில் வைக்கப்பட்ட சீலை, யாரும்  இல்லாத நேரத்தில் எதற்காக உடைத்தீர்கள் என கேட்டு, வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.  அதற்கு தேர்தல் அலுவலர் முறையாக பதிலளிக்கவில்லை, என கூறப்படுகிறது.  இதனால், ஆத்திரமடைந்த அனைத்து கட்சியினர் வாக்குச்சாவடி மையத்தை முற்றுகையிட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்து காஞ்சிபுரம் டிஎஸ்பி பாலசுப்பிரமணியம்  தலைமையில் மாகரல் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரித்ததனர். பின்னர், இதுதொடர்பாக மாவட்ட தேர்தல் அலுவலரிடம் தெரிவித்து, உரிய விசாரணை நடத்தப்படும், என கூறி அனைத்து கட்சியினரையும் சமாதானம் செய்தனர். இதை  தொடர்ந்து, கட்சி ஏஜென்டுகள் முன்னிலையில் மீண்டும் இயந்திரங்களுக்கு சீல் வைத்து காஞ்சிபுரம் அடுத்த திருப்புட்குழி அரசு மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள  வாக்கு எண்ணும் மையத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. இச்சம்பவத்தால், அங்கு ஒரு மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

உள்நோக்கம் இல்லை ஆட்சியர் விளக்கம்
மாவட்ட தேர்தல் அலுவலரான கலெக்டர் பொன்னையா இதுபற்றி கூறுகையில், ‘‘வாக்குப்பதிவு இயந்திரங்களில் இருந்த பேட்டரியை கழற்ற மறந்து, வாக்குப்பதிவு  அலுவலர்கள் சீல் வைத்துள்ளனர். எனவே, வாக்குப்பதிவு இயந்திரங்களில் இருக்கக்கூடிய பேட்டரியை கழற்ற வாக்குச்சாவடி மைய பணியாளர்கள் முயன்றபோது, சீல்  உடைந்துள்ளது. இதில் எந்த உள்நோக்கமும் இல்லை. இது தற்செயலாக நடந்த விபத்து. வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான மொத்த வாக்கு எண்ணிக்கையும், கட்சிகளின் ஏஜென்டுகளின் கையில் இருக்கும் பதிவான மொத்த வாக்குகள் எண்ணிக்கையும் சரியாக  இருந்த காரணத்தினால் மீண்டும் கட்சி முகவர்களின் முன்னிலையில் சீலிடப்பட்டு வாக்கு எண்ணும் மையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும் இது சம்பந்தமாக  அரசியல் கட்சிகளின் மாவட்ட செயலாளர்களுக்கு எழுத்துப்பூர்வமாக விளக்கம் அளிக்கப்படும்,’’ என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : breakdown ,departure ,Booth , Sealed breakdown , voting machines,short time ,after Booth's, departure
× RELATED பூத் சிலிப்பை அடையாள அட்டையாக பயன்படுத்த முடியாது: தேர்தல் ஆணையம்