×

மன்னார்குடி அருகே குடிநீர் கேட்டு மக்கள் மறியல்

மன்னார்குடி: கோட்டூர் அருகே வெங்கத்தான்குடி  ஊராட்சியில் குடிநீர் கேட்டு மக்கள் சாலை மறியலில் இறங்கியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கோடையை சமாளிக்க உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க அதிகாரிகள் தவறியதால் குடிநீரின்றி தவித்து வருவதாக மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். திருவாரூர் மாவட்டம் கோட்டூர் ஒன்றியம்  வெங்கத்தான்குடி  ஊராட்சியில் சுமார் 2 ஆயிரம் மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய அருகில் ஓடும் பாமணியாற்றில் போர்வெல் போடப்பட்டு அங்கிருந்து 3 கிமீ தூரத்திற்கு பைப் லைன் அமைத்து வெங்கத்தான்குடியில் கட்டப்பட்டுள்ள மேல்நிலைநீர் தேக்க தொட்டியில் மின் மோட்டார்கள் மூலம் ஏற்றப்பட்டு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்தது.

தற்போது கடும் கோடை காலம் நிலவுவதால் ஆறுகள், குளம் குட்டைகளில் நீரின்றி காய்ந்து கிடக்கின்றன. இதனால்  நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக குறைந்து விட்டது.  கோடையை சமாளிக்க குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளும், ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளும் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க தவறியதால் கோட்டூர் ஒன்றியம் முழுவதும் பரவலாக குடிநீர் பிரச்னை தலைவிரித்தாட துவங்கியுள்ளது. மக்கள் குடிநீருக்காக பல கிமீ தூரத்திற்கு சென்று கிடைக்கும் குறைந்த அளவு தண்ணீரை அலைந்து திரிந்து எடுத்து வரும் அவலமான சூழல் நிலவுகிறது. இதனால் பொதுமக்கள் குறிப்பாக பெண்கள் சொல்ல முடியாத வேதனையில் உள்ளனர்.

இந்நிலையில், கோட்டூர் அருகே வெங்கத்தான்குடி  ஊராட்சியின் கடைக் கோடி பகுதியான ஆற்றங்கரை பகுதியில் வசிக்கும் சுமார் 300 க்கும் மேற்பட்ட மக்கள் தங்களுக்கு பல மாதங்களாக முற்றிலும் குடிநீர் விநியோகம் செய்யப்படாததை கண்டித்தும், பலமுறை குடிநீர் பிரச்னை குறித்து அதிகாரிகளுக்கு மனுக்கள் கொடுத்தும் உரிய முன்னெச்சரிக்கை  நடவடிக்கை எடுக்க தவறிய அதிகாரிகளை கண்டித்தும், சீரான குடிநீர் விநியோகம் செய்திட வலியுறுத்தியும் கிராம மக்கள் பெண்கள் வேதபுரம் திருத்துறைப்பூண்டி சாலை யில் காலி குடங்களுடன் திடீரென மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு வாகனங்கள் வரிசைகட்டி நின்றன.
அதிகாரிகளின் சமரசத்தை ஏற்று மக்கள் போராட்டத்தை  கைவிட்டனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Mannargudi , Mannarkudi, drinking water, people, stir
× RELATED பறக்கும்படை சோதனையில் ரூ.64,390 பறிமுதல்