×

‘ரமணா’ திரைப்பட பாணியில் இறந்த நோயாளிக்கு சிகிச்சை அளிக்க முயன்ற டாக்டர்கள்: சடலத்துடன் உறவினர்கள் மறியல்

சித்தூர்: சித்தூர் அருகே ஏற்கனவே இறந்தவருக்கு ‘ரமணா’ திரைப்பட பாணியில் சிகிச்சை அளிக்க முயன்ற டாக்டர்களை கண்டித்து உறவினர்கள் சடலத்துடன் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
ஆந்திராவில், சித்தூர் மாவட்டம், வி.கோட்டா மண்டலம், திம்மராஜபல்லி கிராமத்தை சேர்ந்தவர் ரத்தினம்மா (45). இவருக்கு கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் குடும்பத்தினர் இவரை குப்பம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு கடந்த 10 நாட்களாக அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை  அளித்து வந்தனர். இந்நிலையில், ரத்தினம்மா சிகிச்சை  பலனின்றி நேற்று முன்தினம் இறந்ததாக டாக்டர்கள் பேசிக் கொண்டனர். இதை ரத்தினம்மாவின் உறவினர்கள் கேட்டுள்ளனர்.

தொடர்ந்து தங்களின் அறையை விட்டு வெளியே வந்த டாக்டர்கள், ‘ரத்தினம்மாவின் உடல்நிலை மிகவும் மோசமாக உள்ளதால் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்க வேண்டும். ஆபரேஷன் செய்தால் அவர் உயிர் பிழைக்க வாய்ப்பு உள்ளது, அதற்காக ஆபரேஷனுக்கு ரூ.1 லட்சம் பணம் கட்ட வேண்டும்’ என்று குடும்பத்தினரிடம்  தெரிவித்தனர். இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர், ஏற்கனவே உயிரிழந்த ரத்தினம்மாவிற்கு மீண்டும் ஆபரேஷன் செய்தால்  எவ்வாறு  உயிர் பிழைப்பார்?  என்று சரமாரியாக கேள்வி எழுப்பி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து, ரத்தினம்மாள் சடலத்தை மருத்துவமனை எதிரே உள்ள கிருஷ்ணகிரி-குப்பம் தேசிய நெடுஞ்சாலையில்  வைத்து மறியலில் ஈடுபட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்த குப்பம் சப்-இன்ஸ்பெக்டர் சுதாகர் ரெட்டி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ரத்தினம்மாவின் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். அதன்பேரில் மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.  ஏற்கனவே இறந்தவருக்கு டாக்டர்கள் ‘ரமணா’ சினிமா பாணியில் சிகிச்சை அளிக்க முயன்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Doctors ,patient ,relatives ,Ramana , 'Ramana', film, dead patient, treatment, doctors
× RELATED மேற்படிப்பை முடித்த பின் அரசு...