×

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோயிலில் 1008 யாக குண்ட வேள்வி பூஜை: திரளாக பக்தர்கள் பங்கேற்பு

சென்னை: மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோயிலில், 1008 யாக குண்டங்கள் அமைத்து, வேள்வி பூஜை நடந்தது. அதில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் சித்ரா பௌர்ணமி விழாவை முன்னிட்டு, 1008 யாக குண்டங்கள் அமைத்து மாபெரும் கலச விளக்கு வேள்வி பூஜையை ஆன்மிக  குரு பங்காரு அடிகளார் நேற்று நடத்தி வைத்தார்.மழை வளம் பெருகவும், மக்கள் மன நிம்மதியுடன் வாழவும், உலக நன்மைக்காகவும் இந்த வேள்வி பூஜை நடத்தப்பட்டது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் மற்றும் பல  முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். இந்த வேள்வியில் சூலம், ஒற்றை நாகம், இரட்டை நாகம், முக்கோணம், சதுரம், ய் சதுரம், அறுகோணம் உள்பட பல்வேறு  வடிவங்களில் யாக குண்டங்கள் அமைக்கப்பட்டு இருந்தன.
இதையொட்டி, சித்தர் பீட ஓம் சக்தி மேடையின் முன், அண்டத்தை காக்கும் முகமாக அண்டவெளி சக்கரம் எனும் பிரமாண்டமான சக்கரம் அமைக்கப்பட்டு இருந்தது. அதில்,  நவகிரகங்கள் வைக்கப்பட்டிருந்தன. மேலும், கருவறை முன்பாக பஞ்ச தெய்வ சக்கரமும், புற்று மண்டபத்தின் முன் இயற்கை சக்கரம் ஆகியவை அமைக்கப்பட்டு இருந்தன.மேலும், அதர்மத்தையும், தீமைகளையும் அகற்றும் விதமாக கத்தி, பிரம்பு, சாட்டை, சூலம், கதை, சங்கு சக்கரம் போன்ற ஆயுதங்கள்  வைக்கப்பட்டிருந்தன. நேற்று வேள்வியின்  தொடக்கமாக மேல்மருவத்தூர் ஆன்மிக இயக்க தலைவர் லட்சுமி பங்காரு அடிகளார் முன்னிலையில், யாகசாலை முழுவதும் திருஷ்டி எடுக்கப்பட்டு பின்னர், கோ பூஜை  நடத்தப்பட்டது.

இந்த வேள்வியில் வேளாண்மை துறை அமைச்சர் துரைக்கண்ணு, அரசு தேர்வாணைய தலைவர் அருள்மொழி, ஓய்வு பெற்ற நீதிபதிகள் முருகேசன், ராஜேஷ்வரன், தென்னிந்திய  ரயில்வே அதிகாரி செந்தில்குமார், ஓய்வு பெற்ற ரயில்வே அதிகாரி ஜெயந்த், முதலமைச்சரின் சிறப்பு திட்ட அதிகாரி ராதாகிருஷ்ணன், காஞ்சிபுரம் மாவட்ட நீதிபதி கருணாநிதி  மற்றும் பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். ஆன்மிக இயக்கத் துணைத் தலைவர் கோ.ப.அன்பழகன் விழாவில் பங்கேற்று சிறப்பித்தார். விழா ஏற்பாடுகளை ஆன்மிக இயக்கத் தலைவர் லட்சுமி பங்காரு அடிகளார் மற்றும்  துணை தலைவர்கள் கோ.ப.செந்தில்குமார், ஸ்ரீதேவி ரமேஷ் ஆகியோர் செய்தனர்.இதில் தஞ்சை, திருவாரூர், நாகை மற்றும் காரைக்கால் மாவட்ட ஆதிபராசக்தி சக்தி பீட வழிபாடு மன்ற நிர்வாகிகள், மற்றும் தஞ்சை மாவட்ட தலைவர் சக்திவாசன், சக்தி  பீடங்களின் இணை செயலாளர் ராஜேந்திரன் ஆகியோர் உடன் இருந்தனர். தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து  கொண்டனர்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : pilgrims ,Adiraparakthi , 1008,pilgrims , Adiraparakthi temple
× RELATED நாகூர் தர்காவில் 467வது கந்தூரி விழா கொடியேற்றத்துடன் தொடக்கம்