×

2.7 லட்சம் பேரின் உயிருக்கு உலை வைக்கும் விறகு, சாணம்: டெல்லி ஐஐடி ஆராய்ச்சியாளர்கள் தகவல்

புதுடெல்லி: ‘விறகு, மாட்டுசாணம் ஆகியவற்றை வீடுகளில் பயன்படுத்தி சமைப்பதை தவிர்த்தால் ஆண்டுக்கு 2.7 லட்சம் பேர் உயிரை பாதுகாக்கலாம்’ என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். டெல்லி ஐஐடியை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், வீடுகளில் பயன்படுத்தப்படும் எரிபொருள்கள் குறித்து ஆய்வு ஒன்றை மேற்கொண்டனர். இது தொடர்பான அவர்களின் ஆய்வுக்கட்டுரை தேசிய அறிவியல் அகடமி என்ற இதழில் வெளியிடபப்ட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: இந்தியாவில் பல வீடுகளில் விறகுகள், மாட்டு சாணத்தை பயன்படுத்தியும், மண்ணெண்ணெய், நிலக்கரி ஆகியவற்றை பயனபடுத்தியும் சமையல் செய்கின்றனர். இந்த வகை எரிபொருட்கள் பயன்படுத்துவதை தவிர்த்தால் நாட்டின் காற்றுமாசு அளவு வெகுவாக குறையும். வீட்டில் எரிக்க பயன்படுத்தப்படும் இந்த பொருட்களின் பயன்பாட்டை குறைத்தால் காற்று மாசு தொடர்புடைய மரணத்தையும் குறைக்க முடியும்.

இதன் மூலம் நாட்டின் மரணம் விகிதத்தை 13 சதவீதம் அளவுக்கு குறைக்க முடியும். இதன் மூலம் ஆண்டுக்கு 2.7 லட்சம் பேரின் இறப்பு தவிர்க்கப்படும். விறகுகள், மாட்டு எரு ஆகியவைதான் நாட்டின் மிகபெரிய காற்று மாசுவாக விளங்குகிறது. இதை தவிர்த்தால் தொழிற்சாலை மற்றும் வாகன புகையில் எந்த மாற்றமும் செய்ய வேண்டியிராது. கடந்த 2015ம் ஆண்டு இந்தியாவின் சராசரி காற்று மாசு அளவு கனமீட்டருக்கு 55 மைக்ரோ கிராம் என்ற அளவில் இருந்தது. தற்போது டெல்லி உலகில் காற்று மாசு அதிகமாக உள்ள நகரங்களின் பட்டியலில் இடம்பெற்று விட்டது. விறகை எரிப்பதன் மூலம் கிடைக்கும் புகையில் 3000 ரசாயன பொருட்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இது சிகரெட் புகைக்கும் போது கிடைக்கும் புகைக்கு சமமான அளவு மாசுவை கொண்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இது தொடர்பாக கலிபோர்னியா பல்கலைக்கழக பேராசிரியர் கிர்க் சுமித் கூறுகையில், `‘இந்தியாவில் உள்ள வீடுகளில் பாதி அளவுக்கும் மேல் மோசமான எரிபொருட்களை பயன்படுத்தி சமைக்கப்படுகின்றன. இதை நீக்காமல் சுத்தமான சுற்றுப்புறத்தை கொண்டு வர முடியாது, குப்பைகளை எரிப்பதையும் இந்தியர்கள் தவிர்ப்பதில்லை’’ என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : researchers ,Delhi IIT , 2.7 lakh, people, bio-fire, firewood, dung, Delhi IIT, information
× RELATED லண்டனில் ஆழ்கடலில்...